மதுரையில் பட்டபகலில் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் செல்போனை வழிப்பறி செய்துவிட்டு தப்பியோடிய  வட மாநில இளைஞரை விரட்டிப் பிடித்த பள்ளி மாணவர்கள்.

 

மதுரை மாநகர் ரயில்வே நிலையம் அருகே உள்ளது பெரியார் பேருந்து நிலையம். மதுரை மாநகர் மற்றும் புறநகர் என அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் அரசு பேருந்துகள் இங்கிருந்து புறப்பட்டு செல்லும் என்பதால் அந்த பேருந்து நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வருகை தருவார்கள்.

 





இந்த நிலையில் இன்று காலை பேருந்து நிலையத்தில் பஸ்சில் ஏற முயன்ற  மதுரை தாராப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும விருதுநகர் மாவட்டம் ஆவியூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா ஆகிய இருவரும் பெரியார் பேருந்து நிலையத்தில் வேலைக்காக பேருந்தில் ஏறும்போது இருவரிடம் கையில் வைத்திருந்த  செல்போன்களை அந்த பகுதியில் நடந்து சென்ற நான்கு வடமாநில இளைஞர்கள் வழிப்பறி செய்துள்ளனர்.

 




 

இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கு பேருந்து ஏறுவதற்காக காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வட மாநில இளைஞர்களை விரட்டினர். அப்போது ஒரே ஒரு இளைஞர் மட்டும் கையும் களவுமாக பிடித்த நிலையில் மற்ற 3 வட மாநில இளைஞர்களும் தப்பியோடினர்.  இதனையடுத்து  பள்ளி மாணவர்கள் மற்றும் அந்த பகுதியில் இருந்த பயணிகள் வழிப்பறியில் ஈடுபட்ட சஜான் என்ற  வட மாநில இளைஞரை அழைத்து வந்து போக்குவரத்து அதிகாரிகளிடம் பிடித்துகொடுத்து பின்பாக காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மதுரை மாநகரின் முக்கிய பேருந்து நிலையமான பெரியார் பேருந்து நிலையத்தில் பட்டப் பகலில் ஆயிரக்கணக்கான பயணிகள் மத்தியில் செல்போன் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற மூன்று வட மாநில இளைஞர்களையும் திடீர் நகர் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.