நாகமலை கோட்டை பகுதியில் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட டவுசர் கொள்ளையர்கள் இருவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொல்லை கொடுத்த குரங்கு குல்லா - டவுசர் கொள்ளையர்கள்
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து ஆகிய பகுதிகளில் நகர் விரிவாக்கம் புதிய குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால், இங்கு மக்கள் தொகையும் உயர்ந்து வருகிறது. காலி வீட்டுமனை நிலம் மற்றும் கட்டுமானம் நடக்கும் கட்டடங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் எல்லைக்கு உட்பட்ட ராம்கோ நகரில் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் நள்ளிரவு அடுத்தடுத்து நான்கு வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைக்க முயற்சித்த சிசிடிவி காட்சி அப்போது, வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாகமலை கோட்டை பகுதியில் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட டவுசர் போட்ட - குரங்கு குல்லா கொள்ளையர்கள் இருவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
2 ஆண்டுகளாக தொல்லை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக இரவு நேரங்களில் டவுசர் அணிந்தும் குரங்கு குல்லா அணிந்தும் இரண்டு பேர் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். இரவு நேரங்களில் டவுசர் அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
சி.சி.டி.வி., காட்சிகள்
இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதை தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை மற்றும் சமயநல்லூர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் போலீசார் இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
கொள்ளையர்கள் சிறையில் அடைப்பு
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஈரோடு மாவட்டம் பனையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தமாரியப்பன் மகன் சிவா மற்றும் சிவகங்கை மாவட்டம் சக்கந்தி கிராமத்தைச் சேர்ந்த முனியன் மகன் மருதுபாண்டி என்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் போலீஸ் எரித்துக் கொலை.. காட்டிக் கொடுத்த G-PAY - ஆட்டோ டிரைவர் சிக்கியது எப்படி?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Ramzan Special Trains: தென் மாவட்ட மக்களே... ரம்ஜானுக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில் முன்பதிவு துவங்கியாச்சு !