மதுரையில் போலீஸ் எரித்துக் கொலை.. காட்டிக் கொடுத்த G-PAY - ஆட்டோ டிரைவர் சிக்கியது எப்படி?

காவலரின் Gpay பண பரிவர்த்தனை மற்றும் சிசிடிவி காட்சிகள் என துல்லியமாக விசாரணை நடத்தி கொலையாளியை சுட்டுப் பிடித்து கைது செய்துள்ளனர்.

Continues below advertisement

தனிப்படை காவலர் மாயம்

 
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மலையரசன் (36). இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக 10 ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார். இவருக்கு பாண்டிச்செல்வி (33) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகளுடன், காவலர் குடியிருப்பில் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த  சில நாட்களுக்கு முன் பைக் விபத்தில் மலையரசனின் மனைவி பாண்டிசெல்வி உயிரிழந்தார். இந்நிலையில் மனைவி உயிரிழந்த சோகத்தில் பணியிலிருந்து சில நாட்கள் அனுமதி விடுமுறையில் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில் மலையரசன் எங்கு சென்றார் என தெரியாமல் உறவினர் தேடிவந்துள்ளனர்.
 

எரிந்த நிலையில் காவலர் உடல் மீட்பு

 
இதனையடுத்து அவர் எங்கு சென்றார்? என்பது தெரியாத நிலையில் தனிப்படை காவலரான மலையரசனின் உடலானது 19-ஆம் தேதி எரியூட்டப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பெருங்குடி காவல்துறையினர் உடலை மீட்டனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக பெருங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்திவந்தனர். இதில் மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த மூவேந்திரன் என்ற ஆட்டோ ஓட்டுனரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
முன்னதாக விமான நிலைய பைபாஸ் சாலையில் மூவேந்திரனை கைது செய்ய தனிப்படையினர் சென்றபோது புதருக்குள் பதுங்கி இருந்த மூவேந்தர் காவலர்களை மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்க முயன்றுள்ளனர். அப்போது சார்பு ஆய்வாளர் மாரிக்கண்ணனின் கையில் ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் சார்பு ஆய்வாளர் படுகாயமடைந்தபோது காவல்துறையினர் பாதுகாப்பு கருதி தப்பியோடிய மூவேந்தரை தனிப்படை காவல்துறையினர் முழங்காலில் சுட்டுப்பிடித்து கைது செய்துள்ளனர். இதனையடுத்து துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மூவேந்திரனும், காயமடைந்த திருமங்கலம் தனிப்படை சார்பு ஆய்வாளர் மாரிக்கண்ணனும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

Gpay மூலமாக பணம்

 
இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணையில், கொலையுண்ட தனிப்படை காவலர் மலையரசனின் மனைவி விபத்து காரணமாக மதுரை சிந்தாமணி டோல்கேட் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அவரை பார்ப்பதற்காக மலையரசன் அவ்வப்போது வந்து சென்றபோது ஆட்டோவை பயன்படுத்தியுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுனரான மூவேந்திரனுக்கும் காவலர் மலையரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவசர தேவைக்கு உதவி என்ற அடிப்படையில் டீசல் செலவு, மது குடிக்க என சிறிதளவு பணத்தை Gpay மூலமாக ஆட்டோ ஓட்டுனர் வாங்கிவந்துள்ளார். இதனையடுத்து ஒரு வாரத்திற்கு மேலாக பழகிவந்த நிலையில், காவலர் மலையரசனின் GPAY பாஸ்வேர்டுகளை பார்த்த ஆட்டோ ஓட்டுனர் தெரிந்து வைத்துள்ளார். சம்பவ நாளான 18 ஆம் தேதியன்று மலையரசனை ஆட்டோவில் மது குடிப்பதற்காக மூவேந்திரனும் அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து அழைத்துச் சென்றுள்ளனர். ஏர்போர்ட் ரிங்ரோடு பகுதியில் சாலையோரம் புதர் பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
 

Gpay பண பரிவர்த்தனை மற்றும் சிசிடிவி காட்சிகள்

 
இதனையடுத்து காவலர் மலையரசனின் செல்போனை ஆட்டோ ஓட்டுனர் மூவேந்திரன் எடுத்தபோது அதனை காவலர் கண்டுபிடித்துள்ளார். அப்போது திடீரென காவலர் மலையரசனை ஆட்டோ ஓட்டுனர் கம்பியால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்து உயிரிழந்த நிலையில், அவரை அந்த பகுதியிலயே பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். பின்னர் அவரது உடலை ஈச்சனேரி பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து காவலர் செல்போனில் இருந்து GPAY மூலமாக ரூ.80ஆயிரத்தை டிரான்ஸ்பர் செய்துவிட்டு செல்போனை சாலையோரம் தூக்கிவீசி சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில் தனிப்படை காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரின் செல்போன் அழைப்பு, காவலரின் Gpay பண பரிவர்த்தனை, மற்றும் சிசிடிவி காட்சிகள் என துல்லியமாக தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை சுட்டுபிடித்து கைது செய்துள்ளனர். 
Continues below advertisement