காவல்துறை நடவடிக்கை

 

தென்மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை கஞ்சா கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவிலிருந்து மினி சரக்கு வாகனத்தில் உசிலம்பட்டிக்கு கடத்தி வந்த 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இரு பிராந்திய இராணுவ படை வீரர்கள் உள்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

காவல்துறைக்கு ரகசிய தகவல்

 

ஆந்திராவிலிருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் - ன் தனிப்படை போலீசார் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் மார்நாடு கருப்பசாமி கோவில் அருகில் சந்தேகப்படும் படி நின்றிருந்த மினி சரக்கு வாகனத்தை சோதனை நடத்தியபோது 40 கிலோ கஞ்சாவை கடத்தி வந்திருந்தது கண்டறியப்பட்டது.

 

கஞ்சா பறிமுதல்

 

40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் இந்த கடத்தல் தொடர்பாக வருசநாடு அருகே உள்ள கும்மணந்தொழுவைச் சேர்ந்த செல்வேந்திரன், பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன், திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த வீரமணி மற்றும் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த சங்கர மையிலா என்ற பெண் உள்பட 4 பேரை கைது செய்தும், கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு லாரியையும் பறிமுதல் செய்து உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் உசிலம்பட்டி டி.எஸ்.பி., விஜயக்குமார் தலைமையிலான போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல்

 

இந்த விசாரணையில் கும்மணந்தொழுவைச் சேர்ந்த செல்வேந்திரன், பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்ற இருவரும் கோவை 110 பட்டாலியன் பிரிவில் பிராந்திய இராணுவ படை வீரர்களாக பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது. மேலும் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த சங்கர மையிலா 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திராவில் வசித்து வருவதாகவும், அவர் மூலம் கஞ்சாவை ஆந்திராவிலிருந்து வாங்கி வந்து உசிலம்பட்டி பகுதியில் வைத்து பிரித்து எடுத்து செல்ல முயன்ற போது பிடிபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.