நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை நேற்று பாஜகவுடன் இணைத்தார். இந்நிலையில் இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "22 ஆண்டுகள் எனது அரசியல் பயணம். 16 ஆண்டுகள் சமத்துவ மக்கள் கட்சிக்கு தலைவனாக பயணித்திருக்கிறேன். 1996 ஆம் ஆண்டு எந்த ஒரு சுயநலமும் எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்படி திமுகவுடன் இணைந்து பணியாற்றினேனோ அப்படித்தான் இப்போது பாஜகவில் எனது கட்சியை இணைத்துள்ளேன். எனது முடிவில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளேன். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு இணைந்துள்ளேன். இனி பாஜக தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி கேட்டு பணியாற்றுவேன். 


கூட்டணியில் இருக்கும்போது இடங்களை அதிகமாக கேட்கலாம். குறைவாக கேட்கலாம். கட்சியில் இணைந்த பிறகு அவர்கள் சொல்வதை கேட்பதுதான் சரி. ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதில் சொல்லலாம். மனைவியிடம் கருத்து கேட்டதாக கூறுகிறார்கள். மனைவியிடம் கேட்காமல் யாரிடம் கேட்பார்கள். மறைந்திருந்து தாக்க வேண்டாம். நேரில் வர வேண்டும். யாரையும் தரக்குறைவாக பேசுபவன் நான் கிடையாது. பேசியதும் இல்லை. 


ஒரே ஒரு நிர்வாகி அவசரப்பட்டு வார்த்தையை விட்டார். பின்னர் அவரே தெரியாமல் சொல்லிவிட்டேன் என மன்னிப்பு கேட்டார். விளக்கம் கொடுத்தார். கலைஞரின் இறப்புக்கு கூட அவ்வளவு ட்வீட் போடவில்லை. எனக்கு அவ்வளவு ட்வீட் போடுகிறார்கள்” எனத் தெரிவித்தார். 


நடிகர் சரத்குமாரின் அரசியல் வாழ்க்கை: 


69 வயதான சரத்குமார், தற்போது தனது அரசியல் கட்சியான சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தது நாம் அனைவரும் அறிந்ததே. கடந்த 1996 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் சரத்குமார். கடந்த 1998ம் ஆண்டு திமுக சார்பில் மக்களவை தேர்தலில் நின்று திமுக சார்பில் நெல்லையில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். தொடர்ந்து, கடந்த 2001ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார். 


கடந்த 2006ம் ஆண்டு மனைவி ராதிகா உடன் அதிமுகவில் இணைந்த நிலையில், ராதிகா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அவருடனே, சரத்குமாரும் கட்சியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் தொடங்கினார். அக்கட்சி 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார். தொடர்ந்து 2016 தேர்தலில் தோல்வியடைந்தார்.  என்பது குறிப்பிடத்தக்கது.  2001ல், தி.மு.க.,வால், ராஜ்யசபா எம்.பி., ஆக்கப்பட்டார். அ.தி.மு.க.,வில் இருந்த பின், 2007ல், ஏ.ஐ.எஸ்.எம்.கே., என்ற சொந்த கட்சியை துவக்கினார். 2011ல், தென்காசி சட்டசபை தொகுதியில், அதிமுக கூட்டணியில் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.