மதுரையைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு அரசு சார்பில் வீடு கட்ட பட்டா வழங்கியும் வீடு கட்டப்படாமலே இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

பெ.சின்னப்பிள்ளை அம்மா

 

மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ளது அப்பன் திருப்பதி. இதன்  அருகே அமைந்துள்ள பில்லுச்சேரி எனும் சிறிய கிராமம். இங்கு ஏராளமான கிராம மக்கள் ஒன்றிணைந்து விவசாய பணிகளை செய்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களின் வேளாண் பணிகளில் கொத்துத் தலைவியாகச் செயல்பட்டு, களஞ்சியம் சுய உதவிக் குழுக்களின் வாயிலாக அடித்தட்டு ஏழை மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் பெ.சின்னப்பிள்ளை.

 

இதன் காரணமாக கடந்த 2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அன்றைய பிரதமர் வாஜ்பாயி கையால் ஸ்ரீசக்தி புரஸ்கார் எனும் விருதைப் பெற்றதுடன், வாஜ்பாயே மகிழ்ந்து சின்னப்பிளையின் காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றார். அதன் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி பொற்கிழி விருதும், 2018-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி கையால் ஔவையார் விருதும், 2019-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.

 

கலைஞர் கனவு இல்லம்

 

இந்நிலையில் தனக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து, பட்டா வழங்கப்பட்ட நிலையில், இதுவரை வீடு கட்டித் தரப்படவில்லை என்றும், இதனால் மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது என்று ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்திருந்தார்.

 

இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடடினயாக 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் மதுரை-அழகர்கோவில் முதன்மை சாலையில் அப்பன்திருப்பதி அருகேயுள்ள திருவிழான்பட்டி என்ற ஊரில் 1 சென்ட் 380 சதுர அடி நிலத்தை ஒதுக்கீடு செய்து, இந்த மாதமே கட்டுமானப்பணிகள் அனைத்தும் நடைபெறும் எனவும் அறிவிப்புச் செய்திருந்தார். முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மதுரை கிழக்கு தாசில்தார் பழனிக்குமார், இன்று சின்னப்பிள்ளையை பில்லுசேரியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வீடு ஒதுக்கீட்டிற்கான பட்டாவை வழங்கினார்.

 

இந்த நிலை இன்று வீட்டில் கட்டும் பணிக்கான பூஜை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திருவிழான்பட்டி கிராமத்தில் வீடு கட்டும் பணிக்கான ஆணை வழங்கப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் மோனிகாராணா,

மாவட்ட ஊராட்சித்தலைவர் சூரியகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.