‛பேசி பேசி ராசியானதே... மாமன் பேரை சொல்லிச் சொல்லி ஆளானாதே... ரொம்ப நாளானதே...’ இந்த வரிகள் தான், இன்று ஒரு போலீஸ் உயர் அதிகாரியைப் பற்றி வரிவரியாய் எழுத காரணமாகியிருக்கிறது. குடிபோதையில் இருப்பது தவறு, அதே நேரத்தில் அரை நிர்வாணத்தில் இருப்பது அதை விட தவறு... அதை விட தவறு... குடிபோதையில், அரை நிர்வாணத்துடன் ‛பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு...’ பாடலை ஒருவரை புல்லாங்குழல் இசைக்கச் செய்து கேட்பது. ஒருவர் இத்தனை தவறை செய்ய முடியுமா? அதுவும் அவர் ஒரு போலீஸ்காரர் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தால் ஆக வேண்டும்... ஏன் என்றால்... சம்மந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரி சோமசுந்தரம்... அத்தனைக்கும் அப்பாற்பட்டவர்.




மதுரை ஆயுதப்படையின் துணை ஆணையர் சோமசுந்தரம். பெயரோ... மங்களகரமானது. ஆனால் செய்யும் வேலைகள் எப்போதும் அதற்கு ஏற்றார் போல் இருந்தது இல்லை. மதுரையில் முன்பு உதவி கமிஷனராக இருந்த போது ‛டிக்டாக்’ செய்து சர்சையில் சிக்கியவர். அப்புறம் அதுக்காக ஏதாவது ஒரு தண்டனை பெறுவது, அப்புறம் வேறு ஒரு பகுதிக்கு வேலைக்குச் செல்வது, இப்படியே காலங்கள் கடந்து மதுரைக்கு அடுத்ததாக தூத்துக்குடி, சென்னை என தமிழ்நாட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டு, பதவி உயர்வுகளையும் பெற்று விட்டு, மீண்டும் மதுரைக்கே வந்து சேர்ந்தார் சோமசுந்தரம். 


சோமசுந்தரம் ஒரு கலா ரசிகர். அதுவும் மது போதை ஏறிவிட்டால், தலைவரை கையில் பிடிக்க முடியாது. அப்படி தான் சில நாட்களுக்கு முன், நல்ல போதையை ஏற்றிக் கொண்ட சோமசுந்தரத்திற்கு, மஜாஜ் செய்யும் எண்ணம் வந்தது. உடனே ஆடைகளை அவிழ்த்து அரை நிர்வாணமாக ஆயுதப்படை வளாகத்தில் ஆயில் மஜாஜ் செய்து கொண்டார். தனது கட்டுடலை மிடுக்காக வைத்துக் கொள்வதாக நினைத்து, தொந்தியும் தொப்பையுமாய் உடல் முழுக்க எண்ணெய் காப்பு நடத்திய அவர், நாற்காலியில் அமர்ந்து கொண்டார். நம்ம ஆளு தான் கலா ரசிகராச்சே... உடனே அவருக்கு ஒரு கலை தாகம் எடுத்தது. தனக்கு கீழ் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் நன்கு புல்லாங்குழல் வாசிப்பார் என்பதை அறிந்த சோமசுந்தரம், ‛அந்த கலைஞரை அழைத்து வாருங்கள்...’ என உத்தரவிட்டுள்ளார். 




புல்லாங்குழலுடன் அந்த போலீஸ்காரர் வந்து சேர, ‛ம்... நடக்கட்டும்...’ என உத்தரவிட்டார் சோமசுந்தரம். ‛என்னப்பாட்டய்யா...’ என போலீஸ்காரர் கேட்க, ‛நம்ம பாட்டுத்தான்...’ என சோமசுந்தரம் கூற, தேவர் மகன் சீன் போன்று அந்த இடத்தில் கலை கரை புரண்டோடியுள்ளது. சோமசுந்தரத்தின் கோரிக்கையை ஏற்று, பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு பாடவலை போலீஸ்காரர் வாசிக்க... முழு போதையில் சோமசுந்தரம் அதை நேசிக்க... உடலில் ஆயில் வடிந்ததைப் போல... இசையும் வடிந்து ஓடியது. இசை ஆழமாய் போய்க்கொண்டிருக்க... ஆப் பாட்டில் குவாட்டராய் குறைந்தது. பாட்டு முடிவதற்குள் பாட்டிலும் முடிந்துள்ளது. 


இது தொடர்பான செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட துணை ஆணையர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவர் மீதான தவறு நிரூபிக்கப்பட்டது. அப்புறம் என்ன... வந்த இடத்துக்கே போனு... சென்னை ஆயுதப்படைக்கு கலா ரசிகர் சோமசுந்தரம் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ‛நான் போகாதா... ஊரா...’ என்பது போல சோமசுந்தரம் இதை எடுத்துக் கொள்வார் என்பதால், கூடவே காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளார். ‛பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு...’ இப்படி காட்டு காட்டுனு காட்டிடுச்சேனு சோமசுந்தரம்... இனி சோமபானத்தை தொடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.