வட இந்தியாவில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக அடிக்கடி கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வட இந்தியாவில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞருக்கு எதிராக மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.


பழங்குடியின இளைஞர்:


மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது சிங்க்ராவ்ளி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள மோர்வா பகுதியில் வசித்து வருபவர் சூர்யகுமார் கைர்வார். இவர் பழங்குடியின இளைஞர் ஆவார். இந்த நிலையில், சூர்யபிரகாஷ் நேற்று தன்னுடைய உறவினர் லால்சந்த் மற்றும் கைரு என்பவருடன் காய்கறிகள் வாங்க சந்தைக்குச் சென்றுள்ளார்.


அப்போது, அங்குள கோயில் அருகே தீபக் பனிகா என்பவர் சூர்யபிரகாஷ் தம்பி ஆதித்யா மற்றும் அவரது நண்பர் ராகுலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதைக்கண்டதும் சூர்யபிரகாஷ் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.


துப்பாக்கியால் சுட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன்:


இந்த சம்பவத்தின்போது அருகில் உள்ள காரின் உள்ளே பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான ராம்லல்லு வைஷ் மகன் விவேகானந்தா வைஷ் அமர்ந்திருந்தார். அவர் சட்டென்று எதுவும் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சூர்யபிரகாஷை சுட்டார். அவர் சுட்டதில் சூர்யபிரகாஷின் முழங்கையில் குண்டு தாக்கியது. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சூர்யகுமார், விவேகானந்தாவிடம் ஏன் தன்னை சுட்டாய்? என்று கேட்டுள்ளார். ஆனால், விவேக் தன்னுடைய காரில் மின்னல் வேகத்தில் அந்த இடத்தில் இருந்து தப்பியோடினார்.


குண்டு தாக்கிய சூர்யகுமாரை மற்றவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மோர்வா காவல் நிலையத்தில் சூர்யபிரகாஷ் புகார் அளித்துள்ளார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் விவேகானந்தா வைஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தா தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி அந்த பகுதியில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மத்திய பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக பா.ஜ.க. இருந்து வரும் நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ. மகன் பழங்குடியின இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது பெரும் பின்னடைவை அவர்களது அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: தன்பாலின ஈர்ப்பாளர்கள்தான் டார்கெட்.. நிர்வாணமாக வீடியோ எடுத்து பணம், நகை பறிப்பு - நடந்தது என்ன?


மேலும் படிக்க: Crime: அடக்கொடுமையே! மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்; கோபத்தால் வெறிச்செயல்...பெங்களூருவில் ஷாக்!