தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து மக்கள் எந்தளவுக்கு முன்னேறி உள்ளனரோ, சில கும்பல்கள் நூதன முறையில் மோசடி செய்யும் வேலையும் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் ஹைதராபாத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. தன்பாலின சேர்க்கையாளர்களுக்காக பல வித செயலிகள் உள்ளது.


தன்பாலின சேர்க்கையாளர்கள்:


ஹைதரபாத்தில் 23 வயது பொறியாளர் ஒருவர் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கான செயலி ஒன்றை பயன்படுத்தியுள்ளார். அந்த செயலி மூலமாக இளைஞர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவர் தனது பெயர் அஃப்ரிடி என்றும், தான் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வசிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அந்த பொறியாளரை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய அந்த பொறியாளர் அவர் கொடுத்த முகவரிக்கு அவரை சந்திக்கச் சென்றுள்ளார்.


நிர்வாண வீடியோக்கள்:


அவர் அஃப்ரிடியின் அறைக்கு சென்ற பிறகு, அந்த அறையில் இருந்த அஃப்ரிடி கத்தியை காட்டி அந்த பொறியாளரை மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பொறியாளரிடம் ஆடைகளை களையச் சொல்லி நிர்வாணப்படுத்தியுள்ளார். பின்னர், அவரை நிர்வாணமாக தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அவரிடம் இருந்து அவரது வெள்ளி கைகாப்பு, செயின், 2 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மிரட்டி பறித்துள்ளார். பின்னர், இந்த விவகாரத்தை வெளியில் கூறினால் அவருடைய வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டியுள்ளார்,


இதேபோல, அங்கு 27 வயது இளைஞர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவரும் கடந்த புதன்கிழமை இரவு அதே செயலி மூலமாக அஃப்ரிடியுடன் அறிமுகமாகியுள்ளார். அவரிடம் அஃப்ரிடி அதே பஞ்சாரஸ் ஹில்ஸ் முகவரியை அளித்துள்ளார். அந்த முகவரிக்கு சென்ற அந்த இளைஞருக்கு, பொறியாளருக்கு ஏற்பட்ட அதே நிலைதான் ஏற்பட்டுள்ளது.


பணம், நகை பறிப்பு:


அந்த இளைஞரை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த கும்பல் கத்தி முனையில் அவரிடம் இருந்து தங்க மோதிரம், 7 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மிரட்டி பறித்ததுடன், அவரது போன் பேவில் இருந்து அவரை மிரட்டி தங்களது செல்போனுக்கு 20 ஆயிரம் ரூபாய் அனுப்ப வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் கடுமையாக மன உளைச்சல் அடைந்த அந்த இளைஞர்கள் இருவரும் தனித்தனியே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த 27 வயது இளைஞர் அளித்த புகாரில் இந்த சம்பவத்திற்கு அஃப்ரிடியின் நண்பர் ஹாரூனும் உடந்தை என்று தெரியவந்துள்ளது. அவரும் அஃப்ரிடியுடன் சேர்ந்து அந்த இளைஞரை மிரட்டியது தெரியவந்துள்ளது. போலீசார் விசாரணையில் அஃப்ரிடி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.


தன்பாலின சேர்க்கையாளர்களுக்கு ஆன்லைன் செயலி மூலம் அறிமுகமாகி அவர்களுக்கு ஆசைகாட்டி அவர்களை தங்கள் வலையில் விழ வைத்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Crime: அடக்கொடுமையே! மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்; கோபத்தால் வெறிச்செயல்...பெங்களூருவில் ஷாக்!


மேலும் படிக்க: விழுப்புரத்தில் பரபரப்பு .... 475 ஆண்டுகள் பழமையான கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு