கரூர்: பள்ளப்பட்டி நகராட்சி பெண் தலைவரை மாற்றக்கோரி 20 கவுன்சிலர்கள் ஆணையரிடம் புகார் மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சி திமுக பெண் தலைவராக பொறுப்பில் உள்ள முனவர் ஜான் என்பவரை மாற்றக் கோரி, திமுகவைச் சேர்ந்த துணைத் தலைவர் தோட்டம் பஷீர் உள்ளிட்ட 18 திமுக கவுன்சிலர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர், சுயேட்சை கவுன்சிலர் என 20 கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையர் பால்ராஜை சந்தித்து புகார் மனு ஒன்றை வழங்கினர். பள்ளப்பட்டி நகராட்சி 27 வார்டுகள் கொண்டது. நகராட்சிக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை முறையாக செய்யாமல், கழிவுநீர் வடிகால், மின்விளக்கு, சின்டெக்ஸ் தொட்டி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை கொள்முதல் செய்வதில் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆலோசனையின்றி தன்னிச்சையாக முடிவெடுத்து, தீர்மானம் நிறைவேற்றுவதாக புகார் அளித்துள்ளனர். தலைவரை மாற்றாத பட்சத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளப்பட்டி நகராட்சியில் தலைவரை மாற்றக்கோரி கவுன்சிலர்கள் புகார் மனு அளித்த நிலையில், தன் மீது அளிக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய் எனவும், தன்மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்ள தயார் என தலைவர் முனவர்ஜான் பேட்டி.
தன் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் தெரிவித்து நகராட்சி தலைவர் முனவர்ஜான் அளித்த பேட்டியில்,”பள்ளப்பட்டி நகராட்சியில் சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பில் சாலை வசதி, சாக்கடை வசதி, மின்விளக்குகள், குடிநீர் என பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. தலைவரை மாற்ற வேண்டும் என்ற நோக்கோடு பள்ளப்பட்டி நகராட்சியில் தலைவர் பதவிக்கான குதிரை பேரம் நடக்கிறது, தன்மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்ள தயார்” என்றுக் கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்