மத்தியப் பிரதேச மாநில அரசுப் பள்ளி முதல்வர் ஒருவர் மீது மாணவிகளை சீருடை அணியாத காரணத்திற்காக,  ஆபாசமாகத் திட்டியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றின் முதல்வராகப் பணியாற்றி வரும் ராதேஷ்யாம் மாளவியா தன் மாணவிகளின் உடை குறித்து ஆபாச கருத்துகளைக் கூறியதாகவும், அவர்களை அவமானப்படுத்தியதாகவும் புகார் எழுந்த நிலையில் அவர் மீது ராஜ்கர் மாவட்ட மாசல்பூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 


அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்று, பன்னிரண்டு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று, சீருடை அணிந்து வராததற்காகப் பள்ளி முதல்வர் ஆபாசமாகத் திட்டியதாக கூறியுள்ளனர். “நாங்கள் அவரிடம் எங்கள் சீருடை இன்னும் தைத்து முடிக்கப்படாததால் தயாராகவில்லை என்று கூறினோம். எனினும் அவர் எங்களைப் பொருட்படுத்தாமல் திட்டிக் கொண்டே இருந்தார். அதனைத் தொடர்ந்து எங்களை அவர் ஆபாசமான சொற்களால் அவமானப்படுத்த தொடங்கினார். அவர் எங்களை நோக்கி, மாணவிகள் பேஷனாக உடை அணிந்து ஆண் மாணவர்களைக் கவர்வதாகவும், ஆண் மாணவர்கள் கெடுவதற்கு நாங்கள் தான் பொறுப்பு என்றும் கூறினார். மேலும் அவர் சீருடை இல்லாவிட்டால் பள்ளிக்கு நிர்வாணமாக வாருங்கள்” என்று தங்களுக்கு நேர்ந்தவற்றைப் பகிர்கின்றனர் அப்பள்ளியின் மாணவிகள்.  



மாதிரி படம்


 


இதனையடுத்து பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வந்துள்ளனர் பாதிக்கப்பட்ட மாணவிகள். மாணவிகளின் பெற்றோர் பள்ளி முதல்வரைக் கேள்வி எழுப்பிய போது மழுப்பிய அவர், மாணவிகளிடம் சீருடை அணிவது பள்ளியின் விதி என்றும், அதனைப் பின்பற்றுமாறு மட்டுமே சொன்னதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பள்ளி முதல்வரின் ஆபாசப் பேச்சைக் கண்டித்து, அப்பள்ளியின் மாணவ்ர்கள் பள்ளி வளாகத்திற்குள் போராட்டம் நடத்தியுள்ளனர். பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இதன் தொடர்ச்சியாக, பள்ளி முதல்வர் ராதேஷ்யாம் மாளவியா மீது 509ஆம் சட்டப்பிரிவு (ஒரு பெண்ணின் பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு வார்த்தையால், ஒலி எழுப்புதல், சைகையின் மூலம் அல்லது ஏதேனும் பொருளை வெளிப்படுத்தல் அல்லது அப்பெண்ணின் தனிமையில் குறுக்கிடுதல்), 355ஆம் சட்டப்பிரிவு (அவமதிக்கும் நோக்கத்துடன் தாக்குதல்) மற்றும் போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாசல்பூர் காவல் நிலைய அதிகாரி பிரதீக் ஷர்மா கூறியுள்ளார். மாளவியா தலைமறைவாக இருப்பதாகவும், காவல்துறையினர் அவரைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மாசல்பூர்


 


இந்த விவகாரம் குறித்து ராஜ்கர் மாவட்ட கல்வி அதிகாரி பி.எஸ்.பிசோரியா, “பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து அறிந்துள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.