பொதுவாக, வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் இந்திய குடிமகன்களாக கருதப்படமாட்டார்கள். அப்படி குடியேறுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள். இதுதான் அன்றைய நிலை. அப்போதுதான், 1955-ஆம் ஆண்டில்  11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கிற வெளிநாட்டவர்களுக்கு  இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என  குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. 


   இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம்  இந்த சட்டத்தில் சில திருத்தங்களை செய்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது பாஜக அரசு. அதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும் கூட இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். ஆனால் இதே நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அகதிகளுக்கு இந்த சட்டத்தின் கீழ் அனுமதியில்லை. அதே போல இலங்கை வாழ் தமிழர்களுக்கும் அனுமதியில்லை. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்தியக் குடியுரிமை பெற மதத்தை ஒரு காரணியாக்குகிறது பாஜக அரசு என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்திய அரசமைப்பு மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது, அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்கிறது. ஆனால் இந்த சட்டம் மதரீதியிலான பாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது என குற்றம் சாட்டப்பட்டது. மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே இந்த சட்டம் சிதைத்துவிடும் என்கிறார்கள் இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள். 




அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளான, மதச் சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்த சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது . ஆனால் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகத்தான் இந்த சட்டம் என்றால் இதில் இஸ்லாமியர்களையும் சேர்த்து இருக்க வேண்டும். பாகிஸ்தானில் அகமதியா இன மக்கள் இஸ்லாமியர்களாகக் கருதப்படுவதில்லை. அவர்கள் மனித உரிமை மீறல்கள் அவர்கள் மீது அரங்கேறின என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதே போல மியான்மரின் ரோஹிங்கியா அகதிகள் மீது அந்நாட்டு அரசு நடத்திய வன்முறைகள் உலகமே அறிந்தது. இந்நிலையில், ஏன் பாகிஸ்தான் அகமதியாக்களையும், மியான்மர் ரோஹிங்கியாக்களையும் விட்டுவிட்டார்கள் என கேள்வி எழுப்புகிறார்கள் விமர்சகர்கள். அப்பட்டமான மற்றும் வெளிப்படையான மதப்பாகுபாட்டின் வெளிப்பாடுதான் இந்த சட்டம் என குற்றம் சாட்டப்படுகிறது.


அதேபோல அண்டை நாடான இலங்கையிலும் அங்குள்ள தமிழர்கள் உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தனர். இலங்கை வாழ் தமிழர்கள்  இந்துக்கள்தான் என்றாலும் கூட இந்தியக் குடியுரிமை பெற ஏன் அந்த சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஆக, மத ரீதியில் மட்டுமல்லாது இன பாகுபாட்டோடும் பாஜக அரசு நடத்துவதாக இந்த சட்டத் திருத்தத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. 




அதேபோல, NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு அஸ்ஸாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பின்போது, உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அங்கு 19 லட்சம் பேர் சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி அவர்களின் இந்தியக் குடியுரிமை பறிக்கப்பட்டது. அவர்களில் இஸ்லாமியர்கள் தவிர்த்து மற்ற மதத்தினர் குடியுரிமை திருத்த சட்டத்தில் விண்ணப்பித்தால் அவர்களுக்கு மீண்டும் குடியுரிமை கிடைக்கும். இந்த வாய்ப்பு இஸ்லாமியர்களுக்கு இல்லை.


இவ்வாறு அஸ்ஸாம் மாநிலத்தை ஒரு மாடலாகக் கொண்டு இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்கான முதல்படியே CAA என அச்சம் தெரிவிக்கப்பட்டது. குடிமக்கள் பதிவேடு கோருவதைப்போல 1970ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் குடியிருந்ததற்கான ஆவணங்களை பெரும்பாலானவர்கள் வைத்திருக்கமாட்டார்கள். அப்படி ஆவணங்கள் இல்லாதவர்களின் இந்திய குடியுரிமை பறிக்கப்படும். பறிக்கப்படும் மற்ற மதத்தினர் குடியுரிமை திருத்த சட்டத்தைப் பயன்படுத்தி மீண்டும் இந்திய குடியுரிமையைப் பெற முடியும். ஆனால் தலைமுறை தலைமுறையாக இந்தியாவில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் அப்படிக் கோர முடியாது. இந்நிலையில்தான் இந்த சட்ட திருத்தம் இஸ்லாமியர்களைக் குறி வைத்து கொண்டு வரப்பட்டதாகவும், அவர்களைத் தனிமைப்படுத்தும் முயற்சிதான் என்றும் கூறி போராட்டங்கள் வெடித்தன. உங்களுக்கு டெல்லி ஷாஹின்பாக் போராட்டக்களம் நினைவிலிருக்கும். இரவு பகலாக இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து பெண்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் நாட்டையே உலுக்கியது.




இந்த சூழலில்தான் தற்போது குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய கோரி முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்ய கோரும் தீர்மானத்தை தனி தீர்மானமாக சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்டது. அகதிகளாக வருவோரை மதரீதியாக பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சிஏஏ சட்டம் உள்ளதாக தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிஏஏ சட்டம் இலங்கை தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மாபெரும் துரோகம் என்று சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.  நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்கவும், மதசார்பின்மை கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்திட ஒன்றிய அரசினை பேரவை வலியுறுத்துகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


முன்னதாக, நாடாளுமன்றத்தில் இந்த சட்டமசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். அப்போது எதிர்க்கட்சியான திமுக சார்பில் தலைநகர் சென்னையில் மாபெரும் போராட்டமும் நடத்தப்பட்டது. இச்சட்டத்துக்கு எதிராக திமுக ஒரு கோடி கையெழுத்தைப் பெற்று குடியரசுத்தலைவரிடம் அளித்தது. அதேபோல திமுகவின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 
அதேபோல, நாடாளுமன்றத்தில் அதிமுக இந்த சட்டமசோதாவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தது.  இந்நிலையில் தமிழ்நாடு  அரசின் CAA-விற்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஏற்கனவே புதுச்சேரி, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.