ஆபாசமாக பேசி பல கோடி ரூபாய் சம்பாதித்த வழக்கில் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவின் வங்கி கணக்கை முடக்கம் செய்தது சைபர் கிரைம் போலீஸ். யூடியூபில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி விளையாடிய புகாரில் தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் தருமபுரியில் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவை ஏற்கெனவே போலீசார் கைது செய்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஜூன் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் மதன் மற்றும் கிருத்திகாவின் வங்கி கணக்கில் 4 கோடி ரூபாய் பணம் இருந்த நிலையில் இருவரது வங்கி கணக்கையும் சைபர் கிரைம் போலீசார் முடக்கி உள்ளனர்.


முன்னதாக, மதன் மற்றும் டாக்ஸிக் மதன் 18+ ஆகிய யூ-டியூப் சேனல்களில் லைவ் வீடியோ கேம்களின்போது தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்த மதன் மீது சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல சமூக தளங்களில் எதிராக புகார்கள் குவிய தொடங்கியது, தடை செய்யப்பட்ட "பப்ஜி" ஆன்லைன் விளையாட்டை  சட்டவிரோதமாக விபிஎன் எனும் இணைய சேவை மூலம் பயன்படுத்தும் மதன் மீது ஆபாசமாக பேசி யூ ட்யூப் சேனல்களில் வெளியிட்டதால் சிக்கியுள்ளார். யூ ட்யூபர் மதன் மீது தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுவரை சுமார் 160 புகார்கள் மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஆபாச யூ ட்யூபர் மதன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வந்தனர்.


ஏற்கெனவே பெருங்களத்தூரில் வசித்து வந்த மதனின் தந்தை மாணிக்கம் மற்றும் மதனின் மனைவி கிருத்திகாவிடம் விசாரணை நடத்தியதில் மதனின் யூ டியூப் சேனலுக்கு அட்மீனாக கிருத்திகா செயல்பட்டதால் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை ஜூன் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்கும் உத்தரவை பெற்றனர். இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தனது உறவினரின் வீட்டில் பதுங்கி இருந்த மதனை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.


போலீசார் கைது செய்தபோது கதறி அழுத மதன், தெரியாமல் இப்படி செய்து விட்டதாகவும் இனிமேல் ஆபாசமாக பேசமாட்டேன் எனவும் கூறியுள்ளார். ஆனால் அவரை கைது செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். இன்று முழுக்க தர்மபுரியில் வைத்து விசாரணை செய்துவிட்டு நாளை சென்னை அழைத்து வர காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன் பின் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.