உத்தரப்பிரதேசத்தில் திருமணம் செய்ய மறுத்ததால் பெண்ணுக்கு, காதல் சூடு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


காலம் மாறினால் காட்சியும் மாறும் என்பது போல இப்போது உள்ள இளம் வயதினரிடம் காதல் என்பதன் பார்வையே மாறிவிட்டது. மேலும் காதல், திருமணம் என்ற பெயரில் நடைபெறும் பெண்கள் மீதான தாக்குதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. 


அங்குள்ள   தௌரஹரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெரி  கிராமத்தைச் சேர்ந்த  அமன் ஹூசைன் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதனிடையே சமீபத்தில் அமன் தனது காதலியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்க இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு இருந்து வந்துள்ளது. தொடர்ந்து திருமணம் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் அமனுக்கு அவரது காதலிக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளது.


இதனிடையே சம்பவ தினத்தன்று ஆத்திரமடைந்த அமன் சூடான கம்பியை எடுத்து காதலியின் இரு பக்க கன்னங்களிலும் தனது பெயரை அமன் என வலுக்கட்டாயமாக எழுதியுள்ளார். இதனால் வலிதாங்க முடியாமல் கதறிய அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நிலையில் நேராக அந்த பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகாரளித்தார். 


அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நான் கடைக்கு சில பொருட்கள் வாங்க சென்றேன். அப்போது அங்கு வந்த அமன் கட்டாயப்படுத்தி தன் வீட்டிற்கு அழைத்து சென்றான். பின்னர் கை, கால்களை கட்டிப்போட்டு என்னிடம் தவறான செயல்களில் ஈடுபட முயன்றான். அமனின் தாயும், சகோதரியும் அவனுக்கு உதவி செய்தனர். முகத்தில்  சூடான கம்பியால் பெயரை எழுதிய நிலையில் வலியால் அலறி துடித்தேன். ஆனால் என்னை காப்பாற்ற யாரும் வரவில்லை. இந்த விவகாரத்தில் எனக்கு நீதி வேண்டும்” என தெரிவித்துள்ளார். 


இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அமனை தேடி வருகின்றனர். காதலி முகத்தில் காதலன் சூடுபோட்ட விவகாரம் அம்மாநிலத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 




மேலும் படிக்க: தொடர்ந்து வீடியோ காலில் பேசிய மனைவி! அரிவாள்மனையால் வெட்டிய கணவன் - வேலூரில் பரபரப்பு