விரல் நுணியில் என்று இணையதளம் சாத்தியமானதோ அன்றே கயவர்களை அதைக் குறுக்கவழிகளுக்குப் பயன்படுத்துவதை அதிகரித்துக் கொண்டனர். இந்தியாவில் இணையக் கொள்ளை அதிகரித்து வருகிறது. அதிலும், சீனாவிலிருந்து இறங்கும் நபர்கள் இந்தக் கொள்ளையில் வெகுவாக ஈடுபடுகின்றனர். இது இந்தியப் பொருளாதாரத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.  


எனவே, இதுபோன்ற போலியான அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என சைபர் பிரிவு போலீஸார் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அப்படியிருந்தும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர். அப்படித்தான் மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஏமாந்திருக்கிறார்.


நடந்தது என்ன?


மும்பையைச் சேர்ந்த 24 வயது லேப் டெக்னீசியன் பனி புரியம் பெண் ஒருவருக்கு சிரியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழக்கமாகியுள்ளார். அவர் தான் சிரிய ராணுவத்தில் இருப்பதாகவும் தன்னிடம் இருக்கும் பணம், நகைகள் அனைத்தையும் யாரிடமாவது கொடுத்து பத்திரப்படுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்தப் பெண்ணும் சரி நான் அதனைப் பார்த்துக் கொள்கிறேன் எனக்கு எல்லாவற்றையும் கிட்ஃப்ட் பார்சலில் அனுப்புங்கள் எனக் கூறியுள்ளார். ஆனால் அவர் கூறிய மதிப்பிலான நகைக்கு இந்திய சுங்கத்துறை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.15 லட்சம் வரி கட்ட வேண்டும் என்று அந்த நபர் கூறியுள்ளார். அதனையும் நம்பிய அப்பெண் அந்த நபரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.15 லட்சம் அனுப்பியுள்ளார்.


இந்நிலையில் தான் மோசடி நபர் கைவரிசை காட்ட ஆரம்பித்துள்ளார். அவர் மும்பை பெண்ணிடம் பணம் போதவில்லை இன்னும் ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார். 


அப்போது அந்தப் பெண்ணுக்கு சந்தேகம் தட்ட அவர் உடனே போலீஸில் புகார் கொடுத்தார். பெண்ணின் புகாரை மும்பை சைபர் குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.


முக்கியமான ஐந்து மணி நேரம்..


இணையவழி குற்றங்கள் குறித்த புகார்களுக்கு தனியார் நெட்வொர்க் நிறுவனங்களின் ஒத்துழைப்பு  அவசியம். 
புகார்களுக்கு சம்பந்தப்பட்ட  நெட்வொர்க் நிறுவனங்களுக்குத் தகவல் அனுப்பி, டவர் லொக்கேசன் பார்க்கவேண்டும். பேசியவர், கேட்டவர் என, இரு டவர்களின் தகவல்களையும் பெறவேண்டும். அப்போதுதான் குற்றம் புரிந்தவர்கள், பாதிக்கப்பட்டோர்  எங்கே இருந்தனர் என்பதை உறுதி செய்ய முடியும்.  நெட்வொர்க் நிறுவனம் தரும் தகவல் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை தொடங்க முடியும். குறிப்பிட்டநேரத்திற்குள் நெட்வொர்க் நிறுவனத்திடம் இருந்து உரிய தவகல் வருவதில்லை.


போலி வங்கிக் கடன் அட்டை, ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருடுவோருக்கு அந்தப் பணம் குறைந்தது 5 மணிநேரத்துக்கு பிறகே செல்லும். அதற்குள் துரிதமாக செயல்பட்டால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய பணத்தை மீ்ட்டுத் தர முடியும். இதற்கு நெட்வொர்க் நிறுவனம் துரிதமாக செயல்படவேண்டும். இதற்கு நெட்வொர்க் நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம் என சைபர் குற்ற தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவிக்கின்றனர்.


அதுவும் கிஃப்ட தருகிறோம், லாட்டரி அடித்துள்ளது, ஒன் க்ளிக்கில் லோன் போன்ற லிங்குகளை, இ மெயில்களை கிளிக் செய்யக் கூடாது என்று காவல்துறை, வங்கிகள் எச்சரித்து வருகின்றன. ஆனாலும் யாரும் கேட்டபாடில்லை. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் தானே!