1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக பிரிந்தன. இந்திய விடுதலை அடைவதற்கு முன்னர், தேசம் ஏன் இரண்டாக துண்டாடப்பட்டன என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
சமூக பழக்க வழக்கங்கள்:
வரலாற்று வல்லுநரான இசட்.எச்.ஸைதே பிரிவினை குறித்து தெரிவிக்கும் போது, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையானது தவிர்க்க முடியாதது, அதற்கு காரணம் இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களின் சமூக பழக்கங்களின் வேறுபாடுகள்தான். அதை உறுதி செய்யும் விதமாக தான் 1906 ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் என இஸ்லாமிய சமூகத்துக்கான இயக்கம் அமைக்கப்பட்டது.பின்னர் ஆங்கிலேயர் திட்டமிட்டு கொண்டு வந்த மின்டோ மார்லி சீர்திருத்தம் 1909, மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் 1919 ஆகியவை இஸ்லாமியர்களுக்கு தனி தொகுதிகள் ஒதுக்கப்படுவதற்கு வழிவகுத்தன. இந்திய விடுதலையடைந்தால், இந்து மதத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் இஸ்லாமியர்கள் இருக்க வேண்டும் என அச்ச உணர்வு இஸ்லாமிய தலைவர்களுக்கு ஏற்பட்டதாகவும், அந்த தவிர்க்க முடியாத விளைவே தேசப் பிரிவினையாகும் என வரலாற்று நிபுணர் இசட்.எச்.ஸைதே குறிப்பிட்டுள்ளார்.
புவியியல் அரசியல்:
பிரிவினைக்கு முக்கிய காரணமாக முஸ்லிம் லீக் அமைக்கப்பட்டதால் என்று மட்டும் என்று சொல்லிவிட முடியாது என ஆராய்ச்சியாளர் எஸ்.ஆர். மெஹ்ரோத்ரா தெரிவித்தார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு முக்கிய காரணம் புவியியல் அரசியலே என்று எஸ்.ஆர். மெஹ்ரோத்ரா தெரிவித்தார். அதாவது, இந்தியாவின் சில பகுதிகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்து வந்தனர். அப்படிப்பட்ட சாத்தியக்கூறுகளை, ஆங்கிலேயர்கள் தூண்டி விட்டதாலும்,முஸ்லிம் லீக் இயக்கம் பயன்படுத்திக் கொண்டதாகவும் எஸ்.ஆர். மெஹ்ரோத்ரா தெரிவித்தார்.
”காந்தி போராடியிருக்க வேண்டும்”
தேச பிரிவினையானது, தவிர்த்திருக்க வேண்டிய ஒன்று என சங்கதர் தெரிவித்தார். தேச பிரிவினை அறிவிப்பின் போது, காந்தி அதை எதிர்த்து போராடி இருக்க வேண்டும் எனவும், சத்தியாகிரகத்தை தொடங்கி இருக்க வேண்டும் எனவும் சங்கச்தர் தெரிவித்தார்.காந்தி மட்டும் தீவிரமான போராட்டத்தை தொடங்கி இருந்தால், பிரிவினை வாதத்தை தவிர்த்திருக்க முடியும் என சங்கதர் தெரிவித்தார்.
மௌன்ட் பேட்டன் தான் காரணம்:
இந்தியா பிரிவினையை கடைசி வரை எதிர்த்தவரும், இந்திய தேசிய காங்கிரசின் தலைவரும், நாட்டின் முதல் கல்வி அமைச்சருமான அபுல் கலாம் ஆசாத் தெரிவித்ததாவது, பிரிவினைக்கு முக்கிய காரணம் மௌண்ட் பேட்டனே என தெரிவித்தார். முஸ்லிம் இயக்கத்தின் எண்ண ஓட்டத்தை, சாதகமாக பயன்படுத்தி கொண்டு, நாட்டை இரண்டு பாகமாக துண்டு போட்டு விட்டார். மேலும், தனது உடலை கூறு போட்ட பின்புதான், நாட்டை பிரிக்க முடியும் என தீர்க்கமாக இருந்த காந்தியை, தனது அரசியல் சாதுர்யத்தால் மௌண்ட் பேட்டன் பணிய வைத்து விட்டார் என ஆசாத் தெரிவித்தார்.
ஊகங்களுக்கு இடமில்லை:
இது போன்று பல்வேறு தரப்பினரும், பல்வேறு வகையிலான விளக்கங்களை அளிக்கலாம். ஆனால் வரலாற்று நிகழ்வுகளை , இப்படி செய்திருந்தால் பிரிவினையை தவிர்த்திருக்கலாம் என கூறுவது ஊகாமாக இருக்கலாமேயன்றி உண்மையாகாது. ஏனென்றால் வரலாற்றில் ஊகங்களுக்கு இடமில்லை. ஆனால் நாட்டின் பிரிவினையானது, பெரும்பாலான தலைவர்களுக்கு தீராத வடுவாகவே அமைந்தது.