போச்சம்பள்ளி அருகே பள்ளி பருவ காதலை கைப்பிடிக்க முடியாததால் கட்டாய திருமணம் செய்த கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட ராம்குமார்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள காவேரிப்பட்டணம் பாலே குளியை சேர்ந்தவர் ராம்குமார் (25). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி சுவேதா (19) இவர்களுக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. நேற்று முன்தினம் ராம்குமார் தனது வீட்டில் கழுத்தில் மின்சார ஒயர் இறுக்கிய நிலையில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த நாகரசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராம்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ராம்குமார் மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் ராம்குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீசாரிடம் சுவேதா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் ராம்குமாருக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கும் முன்பு திருமணமானது. எனக்கு சூளகிரியை சேர்ந்த கணேசன் (19) என்பவருடன் திருமணத்திற்கு முன்பே பள்ளி பருவத்தில் இருந்து காதல் இருந்தது.
இதை அறிந்த எனது பெற்றோர் எனது விருப்பத்தை மீறி ராம்குமார் உடன் எனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு கணேசனை மறக்க முடியாததால் அவருடன் செல்போனில் பேசி வந்தேன்.
இது ராம்குமாருக்கு தெரிந்து என்னை கண்டித்தார். இதனால் திருமணம் ஆன ஒரு மாதத்தில் கணவனை பிரிந்து நான் கணேசனுடன் சென்று விட்டேன். பிறகு உறவினர்கள் அளித்த புகாரால் எங்களை பிரித்து போலீசார் ராம்குமார் உடன் அனுப்பி வைத்தனர்.
இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது யாருடனும் பேசக்கூடாது என கூறி எனது செல்போனை ராம்குமார் உடைத்தார். இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். இது குறித்து கணேசனிடம் கூறி சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு வர சொன்னேன். அவருடன் உதவிக்கு 17 வயது சிறுவனும் வந்தான். பிறகு நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராம்குமாரை தலையில் அடித்தோம்.
அருகில் இருந்த ஒயரை எடுத்து அவரது கழுத்தை இறுக்கியதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். ஆனால் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மாட்டிக் கொண்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து சுவேதா கணேசன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சேலம் மகளிர் சிறையில் சுவேதாவையும், கணேசனையும் மத்திய சிறையிலும் அடைத்தனர். மேலும் 17 வயது சிறுவனை சேலம் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.