Dinesh Karthik RCB:  ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பின்படி,  ஆடவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.






ஆர்சிபி அணி அறிவிப்பு:


தினேஷ் கார்த்திக் நியமனம் தொடர்பாக வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “எல்லா வகையிலும் எங்கள் கீப்பரை வரவேற்கிறோம், தினேஷ் கார்த்திக், புதிய அவதாரத்தில் RCB க்கு திரும்புகிறார். DK ஆடவர் ஆர்சிபியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராகிறார். கிரிக்கெட்டிலிருந்து மனிதனை வெளியேற்றலாம் ஆனால் மனிதனிடமிருந்து கிரிக்கெட் எடுக்க முடியாது! அவருக்கு எல்லா அன்பையும் பொழியுங்கள், 12வது மேன் ஆர்மி!” என தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஃபினிஷராக சிறப்பாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக், அண்மையில் முடிந்த நடப்பாண்டு தொடருடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வுபெற்றார்.






தினேஷ் கார்த்திக் ஐபிஎல் வாழ்க்கை: 


தினேஷ் கார்த்திக் தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 257 போட்டிகளில் விளையாடி 26.32 சராசரி மற்றும் 135.36 ஸ்ட்ரைக் ரேட்டில் 4,842 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 22 அரைசதங்களும் அடங்கும். ஐபிஎல்லில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்ததே அவரது சிறந்த ஸ்கோராகும். இந்திய அணியின் முதல் டி20 போட்டிக்கான அணியில் இடம்பெற்று இருந்த ஒரு சில இந்திய வீரர்களில் தினேஷ் கார்த்திக் ஒருவராவார். மேலும், கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 17 சீசன்களில் விளையாடியுள்ள வீரர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். 2013ம் ஆண்டு மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு தினேஷ் கார்த்திக் முக்கிய பங்கு வகித்தார். கொல்கத்தா அணியின் கேப்டனாகவும் தினேஷ் கார்த்திக் சிறபாக செயல்பட்டு கவனம் ஈர்த்தார்.  


டெல்லி கேப்பிடல்ஸ் - (2008 - 2010, 2014)
பஞ்சாப் கிங்ஸ் - (2011)
மும்பை இந்தியன்ஸ் - (2012-2013)
குஜராத் லயன்ஸ் - (2016-2017)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -(2018-2021)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - (2022-2024)