கிருஷ்ணகிரி மாவட்டம் டேம் கூட்ரோடு சின்னமுத்தூர் அருகில் உள்ள மோட்டு கொல்லக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பழனி-சத்யா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் குண்டாங்காட்டை சேர்ந்த பழனியின் அக்கா மகன் மாரியப்பன் என்பவர் அருகில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், பழனியின் வீட்டில் கடந்த சில மாதங்களாக மாரியப்பன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே, பழனியின் மனைவி சத்யாவிற்கும் மாரியப்பனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பழனி வீட்டில் இல்லாத நேரத்தில் சத்யாவும் மாரியப்பனும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனை அடுத்து நாளடைவில் இருவரது பழக்கம் வெளியில் தெரிய தொடங்கியுள்ளது.
மேலும் அக்கா மகன் மாரியப்பனுக்கும், தனது மனைவி சத்யாவுக்குமிடையே தொடர்பு இருப்பது பழனிக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பழனி, மனைவி சத்யாவிடம் இந்த பழக்கத்தை கைவிடும்படி வலியுறுத்தி உள்ளார். ஆனால் சத்யா, கணவன் பழனி சொல்வதை கேட்காமல் தொடர்ந்து மாரியப்பன் உடன் பழகி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து சத்யாவை பழனி கண்டித்து வந்துள்ளார். ஆனாலும் அவர் மாரியப்பன் உடனான பழக்கத்தை விடாமல் தொடர்ந்து இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை பழனி வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவர்களது மகன்கள் இருவரும் வெளியே சென்றுள்ளனர்.
இந்நிலையில் சத்யா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது பிற்பகல் நேரத்தில் சத்யாவின் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதை அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிப் பார்த்துள்ளனர். அப்பொழுது வீட்டில் உள்ள கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், சத்யா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் அவருக்கு அருகில் மாரியப்பன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் காவேரிப்பட்டணம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடந்த மாரியப்பனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் பழனி மற்றும் அவரது மகன்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் மாரியப்பன் சத்யாவின் வீட்டிற்கு வந்து தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் வந்த பழனி ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்து விட்டு, பழனியையும் கழுத்து அறுத்து கொலை செய்தாரா? அல்லது மாரியப்பன் சத்யாவின் கழுத்தை அறுத்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாரா? என்ற கோணத்தில் காவேரிப்பட்டணம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இருவரும் வீட்டில் இருந்த நேரத்தில் பெண் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாகவும், மாரியப்பன் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.