நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் கொலை வழக்கில் உறுதியான தடயங்கள் ஏதும் இதுவரை கிடைக்காததால் விசாரணையை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.


ராமஜெயம் கொலை வழக்கு மாதிரி ஆகிவிடுமோ ?


அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் 2012ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேல் ஆகியும் கொலையாளியை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இடையே சிபிஐ, சிபிசிஐடி என வழக்கு விசாரணை பல்வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு மாற்றப்பட்டாலும் அந்த வழக்கில் இதுவரை எந்த உறுதியான முன்னேற்றமும் ஏற்படவில்லை. திமுக மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உருவாக்கி அந்த குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆனால், அவர்களாலும் ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல முடியவில்லை. மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்பதுமாதிரி இருக்கிறது அவர்களது விசாரணை.


ராமஜெயம் கொலை மாதிரியிலேயே ஜெயக்குமார் கொலையும் நடந்திருப்பதால் இந்த வழக்கிலும் காவல்துறையால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.


உடலில் கம்பி, வாயில் பிரஷ்


ஜெயக்குமார் தன்னுடைய தோட்டத்திலேயே எரிந்த நிலையில் உடலில் கம்பி கட்டப்பட்டு, வாயில் பாத்திரம் துலக்கும் பிரஷ் திணிக்கப்பட்டு சடலமாக கிடந்தார். அதனால் ஜெயக்குமார் குடும்ப உறுப்பினர்களை கூட விட்டு வைக்காமல் காவல்துறையினர் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். இதுவரை 78 பேரை விசாரித்துள்ள நிலையில் அவர்களிடமிருந்து உறுதியான தகவல் ஏதும் கிடைக்காததால், சந்தேக பார்வையை யார் மீது படரவிடுவது என்பதில் கூட காவல் துறையினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


2ஆம் தேதி எங்கே போனார் ஜெயக்குமார்?


கடந்த 2ஆம் தேதி இரவு ஜெயக்குமார் தன்னுடைய காரில் எங்கே சென்றார் என்பதை அவரது மொபைல் போன் டவர் மூலம் தெரிந்துக்கொண்ட போலீசார், திசையன்விளையில் உள்ள ஒரு கடையில் டார்ச் லைட் வாங்கியுள்ளதை கண்டுபிடித்தனர். 2ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்ட அவர் உவரியை அடுத்த தோப்புவிளைக்கு சென்றுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


ஆனால், கரைசுத்துப்புதூரில் இருந்து தோப்புவிளை 15 கி.மீட்டர் தூரமே உள்ள நிலையில், 45 கி.மீட்டர் அவர் சுற்று பாதையில் சென்றுள்ளார். செல்லும் வழியில் அணைக்கரை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி காருக்கு பெட்ரோலும் போட்டுள்ளார். அப்போது அந்த காரில் அவர் மட்டுமே இருந்ததை சிசிடிவி கேமரா மூலம் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், அதன்பிறகு என்ன நடந்தது என்பதை கண்டறிவதில்தான் சிக்கல் நீடிக்கிறது.


சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம் ?


மாவட்ட போலீசாரின் விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஜெயக்குமார் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற டிஜிபி சங்கர் ஜிவால் முடிவெடுத்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராமஜெயகும் கொலை அதிமுக ஆட்சி காலக்கட்டத்தில் நடந்ததால், அப்போது விசாரணையில் பல்வேறு தொய்வுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதனால் தன்னுடைய கூட்டணி கட்சியை சேர்ந்த ஒரு நிர்வாகியின் கொலை வழக்கின் பின்னணியை கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்வதில் திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது.


ராமஜெயம் கொலை வழக்குபோல ஜெயக்குமார் வழக்கும் ஆகிவிடக்கூடாது என்பதில் காவல்துறையும் மிகுந்த கவனத்தோடு இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அதனால், இந்த வழக்கு சிபிசிஐடிக்கோ அல்லது சிறப்பு புலனாய்வு விசாரணை குழு ஒன்று அமைத்து அவர்களிடமோ ஒப்படைக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.