கேரளா மாநிலம் திருச்சூருக்கு அருகில் உள்ள திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையின் குட்டிப்புரம் பாலத்தில் ஒரு பைக்கின் மீது வேகமாக வந்த கார் மோதியதில் பைக்கில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.


இதில் பைக் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றதால் இந்த விபத்து பெரிய விவகாரமாக மாறியுள்ளது. 


குறிப்பாக காவல்துறை தரப்பில் இது விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா என்றெல்லாம் விசாரணை நடக்கத் தொடங்கியது. இதனால் காவல்துறை தரப்பில் காரினை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என மும்முரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 


இந்த விபத்துக்குப் பின்னர் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  விபத்தையடுத்து திருச்சூரில் உள்ள ஒரு கடைக்கு  காரினை பார்ட் பார்டாக பிரித்து விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டபோது காவல் துறையினர் காரினை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் விபத்து ஏற்படுத்திவிட்டு காரினை நிறுத்தாமல் சென்றவர்  கோழிக்கோட்டைச் சேர்ந்த கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் பிஜூ ஜார்ஜ்  என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து  பிஜூ ஜார்ஜ் மீது காவல் துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


காவல் துறைக்கு கிடைத்த தகவலின் படியும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சிசிடிவி காட்சிகளின் உதவியினாலும் குற்றவாளியையும் அவர்கள் பயன்படுத்திய காரினையும் விரைந்து கண்டுபிடிக்க உதவியாக இருந்தது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விபத்து பின்னணி 


முன்னதாக, இந்த விபத்து கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி அன்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்தது. கோழிக்கோடு பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று பாலத்தில் இருந்த ஆட்டோ மற்றும் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த குட்டிப்புரம் கியாந்தல்லூரைச் சேர்ந்த 22 வயதே ஆன சனா  என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து குட்டிபுரம் காவல் துறை நடத்திய விசாரணையில் கார் குறித்த தகவல் கிடைத்தது. குறிப்பாக காரின் நம்பர் பிளேட் உடைந்து தொங்கிய காட்சிகள் சிசிடிவியில் இருந்துள்ளது. 


இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சூரில் உள்ள கார் ஸ்கிராப்பிங் மார்க்கெட்டில் இருந்து விபத்துக்குள்ளான காரை கண்டுபிடித்தனர். விபத்துக்கு பின், காரை எங்கும் நிறுத்தாமல் சென்ற கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் பிஜூ ஜார்ஜ காரை குன்னம் குளத்தில் விட்டுவிட்டு, அங்கிருந்த காரை பார்ட் பார்டாக அதாவது காரினை பகுதி பகுதியாக பிரிப்பதற்காக கடையில் விட்டுள்ளார். இதனால் கார் குன்னம் குளத்தில் இருந்து திருச்சூர் அத்தாணியில் உள்ள  காரின் பாகங்களை பகுதி பகுதியாக பிரிக்கும் பெரிய கடைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இருந்துதான் காவல் துறையினர் காரினை பறிமுதல் செய்துள்ளனர்.


அதன் பின்னர் காரின் ஆவணங்களை வைத்து விசாரித்ததில் காட் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் பிஜூ ஜார்ஜ்க்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. ஆனால் காவல் துறை இது குறித்து அவரிடம் கேட்டபோது,  விபத்து குறித்து தனக்கு தெரியாது என கூறியுள்ளார். ஒரு மருத்துவர், ஒருவரின் மீது காரினை ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பிக்க முயற்சி செய்தது மட்டும் இல்லாமல் காரினை உருத் தெரியாமல் அழிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் திருச்சூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.