தஞ்சாவூர்: தஞ்சை தற்காலிக மீன் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முக்கியமாக போக்குவரத்து நெரிசல், மீன் கழிவு நீரால் துர்நாற்றம் போன்ற காரணங்களால் இந்த தற்காலிக மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.


தஞ்சாவூர் கொண்டிராஜபாளையம் அகழி கரைபகுதியில் தற்காலிக மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த தஞ்சை மீன் மார்க்கெட்டுக்கு நாகை, தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கடல் மற்றும் உள்நாட்டு மீன் வகைகள் வருகின்றன. மேலும் கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய இடங்களில் இருந்தும், தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் உயிர் கெண்டை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.


தற்காலிக மீன்மார்க்கெட்டில் ஏராளமான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. பழைய மீன்மார்க்கெட் முன்பு மொத்த மீன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளை தவிர மற்ற நாட்களில் மக்கள் அதிகளவில் வந்து மீன்களை வாங்கி செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அன்று மற்ற நாட்களை விட அதிகளவில் விற்பனை ஆகும். மீன் வாங்க வருபவர்கள் இருசக்கர வாகனங்களில் தான் அதிகபட்சம் வருகின்றனர். தற்காலிக மீன்மார்க்கெட் முன்பு சாலையோரத்தில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.




அவர்கள் மீன்கள் வாங்கி சுத்தம் செய்து திரும்பி வர குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இப்படி சாலையோரத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்பவர்கள் திரும்பி வர தாமதம் ஆவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு வாகனத்திற்கு பின்னால் மற்றொரு வாகனத்தை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் கும்பகோணம் பகுதியில் இருந்து தஞ்சைக்கு வரக்கூடிய பஸ்கள், லாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ போன்றவை இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மீன்மார்க்கெட்டில் இருந்து மீன்கள் கழுவிய கழிவு நீர்,  தொட்டிகளில் தண்ணீர் ஊற்றி உயிர் மீன் வைத்து பின்னர் அந்த தண்ணீரையும் சாலையோரத்தில் ஊற்றி விடுகின்றனர்.


இப்படி கழிவு நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதம் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தற்காலிக மீன்மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்காலிக மீன் மார்க்கெட்டை வேறொரு இடத்திற்கு மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


அதன்படி கொண்டிராஜபாளையம் பகுதியிலேயே வெள்ளை பிள்ளையார் கோவில் பின்புறமும் ஏற்கனவே மாநகராட்சி சார்பில் திருமண மண்டபம் கட்டுவதற்காக பணிகள் தொடங்கப்பட்டு, பாதியிலேயே நிறுத்தப்பட்ட இடத்தில் தற்காலிக மீன் மார்க்கெட்டை மாற்ற முடிவு செய்யப்பட்டது.


அதன்படி தற்காலிக மீன் மார்க்கெட்டை இடமாற்றுவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில்லறை கடைகள் வரிசையாக அமைக்கவும், அந்த கடைகளுக்கு பின்புறம் மீன்கள் வெட்டும் இடம் அமைக்கவும் இடம் ஒதுக்கப்பட்டு, தகரத்தால் மேற்கூரை அமைக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மண்ணில் கழிவுநீர் தேங்காமல் நிற்பதற்கு வசதியாக சிமெண்டு தளமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு தற்காலிக மீன்மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டால் கொண்டிராஜபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.