செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உடலை கைப்பற்றிய கிளாம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


நண்பர்களுக்கு ட்ரீட்


சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் தனது நண்பர்கள் ஏழு பேருடன் சேர்ந்து கிளாம்பாக்கம் அருகே உள்ள பகுதியில் மது அருந்தியுள்ளனர். அஜித் தனது நண்பருக்கு ட்ரீட் வைத்ததாக கூறப்படுகிறது. சென்னையில் மது அருந்தினால் சாதாரணமாக இருக்கும் என்பதால் சென்னை புறநகர் பகுதியை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தநிலையில் அமைந்தகரை பகுதியை சேர்ந்த ஏழு பேரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள வயல் பகுதியில் உள்ள கிணறு அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கிணற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. 


மது போதையில் நடந்த கொடூரம்


ஏற்கனவே மது போதையில் இருந்த கார்த்திக் மற்றும் பிரதீப் ஆகிய இருவருக்கும் நீச்சல் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. மது போதையில் கிணற்றில் இறங்கிய நிலையில் கார்த்திக் மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 


இதனைப் பார்த்த மற்ற நண்பர்கள் உடனடியாக அக்கம் பக்கத்தினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக விரைந்து வந்த கிளாம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த இரண்டு பேரின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 


LIVE | Kerala Lottery Result Today (06.08.2024): கேரளா லாட்டரி முடிவு இன்று (06.08.2024): ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-427 செவ்வாய் டிரா அவுட் - முதல் பரிசு 75 லட்சம்


இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது: முதற்கட்ட விசாரணையில் சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த ஏழு நண்பர்கள், மது அருந்த வந்துள்ளனர். அந்த இடத்தில் கிணற்றில் தவறி விழுந்ததில் இருவர் உயிரிழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். நண்பர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்செயலாக நடந்த விபத்தா அல்லது வேறு ஏதாவது சம்பவம் நடைபெற்றதா என்று கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்


மதுவால் ஏற்படும் பாதிப்புகள்...


அவ்வப்பொழுது நீர்நிலைகளில் மது அருந்திவிட்டு செல்பவர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் இருக்கும் கிணறுகள், கைவிடப்பட்ட குவாரிகளில் தேங்கும் நீர் நிலைகளில் இளைஞர்கள் ஆபத்தை மீறி குளிப்பது அதிகரித்து வருகிறது. இது போன்ற இடங்களில் நீச்சல் தெரிந்தவர்கள் கூட குளிக்கச் செல்லக்கூடாது என காவல்துறை எச்சரிக்கை கொடுத்தும், இளைஞர்கள் அதை மீறி செயல்பட்டு வருவதால் இந்த உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.


கிணற்று பகுதியில் மட்டுமில்லாமல் கைவிடப்பட்ட குவாரிகள் இருக்கும் பகுதியில் அதிகளவு உயிரிழப்புகள் நடைபெறுகின்றன. இது போன்ற இடங்களில் உயிரிழப்பு நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட இடங்களில் அபாய பலகைகள் வைக்க வேண்டும். காவல்துறையினரும் முறையான கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது