Crime: 19 வயது இளம்பெண்ணை கடத்தி சென்று நாட்கணக்கில் 23 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாரணாசியல் நேர்ந்த கொடூரம்:
உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழும் குற்றங்கள் நாட்டையே உலுக்குவது என்பது புதியதல்ல. அந்த வகையில் தான் 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் கேட்போர் நெஞ்சை உறை செய்கிறது. இந்து மதத்தின் மையம் மற்றும் இந்துக்கள் மற்றும் சமணர்களுக்கு மிகவும் புனிதமான நகரமாக கருதப்படும், வாரணாசியில் தான் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, 19 வயது இளம்பெண்ணை கடத்திச் சென்று, சுமார் ஒரு வாரத்திற்கு 23 ஆண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேரை கைது செய்துள்ள போலீசார், மற்ற குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.
மாயமான இளம்பெண்:
வடக்கு வாரணாசியில் உள்ள லால்பூர் பகுதிதியைச் சேர்ந்த அந்த இளம்பெண், கடந்த மாதம் 29ம் தேதியன்று தனது தோழியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். வழக்கமாக அவ்வப்போது அந்த வீட்டிற்கு செல்பவர், எப்போதும் பாதுகாப்பாக வீடு திரும்பிவிடுவார். ஆனால் கடந்த 29ம் தேதியன்று தோழியின் வீட்டிற்கு சென்றவர் மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பவே இல்லை. பெற்றோரும் குடும்பத்தினரும் அந்த பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காததால், கடந்த 4 ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்தனர். அதே நாளில், பாண்டேபூர் சந்திப்பில் போதை தலைக்கேறிய நிலையில் அந்த பெண் கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்டுள்ளார். தட்டு தடுமாறி அருகிலுள்ள ஒரு தோழியின் வீட்டிற்குச் சென்று, அங்கிருந்து தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதன் பிறகு தான் அந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோர் அறிந்து கதறி துடித்துள்ளனர்.
நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்
தாயின் சிறுமி அளித்த புகாரில்,
- ”மார்ச் 29 அன்று தனது மகள் தோழியின் வீட்டில் இருந்து திரும்பும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை சந்தித்தார். அவர் அவளை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்தார்.
- மார்ச் 30 அன்று மற்றொரு இரண்டு பேர் தங்கள் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் நடேசர் பகுதியில் அவளை விட்டுச் சென்றனர்.
- மார்ச் 31 அன்று மேலும் ஐந்து பேர் சேர்ந்து அவளை மால்தஹியாவில் உள்ள ஒரு ஓட்டலில் அடைத்து போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- ஏப்ரல் 1 ஆம் தேதி, மேலும் பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள்
- பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரும் அவரது இரண்டு நண்பர்களும் அவளை அவுரங்காபாத்தில் உள்ள ஒரு கிடங்கிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவளை பாலியல் வன்கொடுமை செய்தார்கள். பின்னர் அவன் அவளை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான், அங்கு மேலும் இரண்டு பேர் அவளை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- அவள் தப்பித்து சிக்ராவில் உள்ள ஒரு வணிக வளாகத்தை அடைந்தபோது, அவளுக்கு உதவும் விதமாக பேசி மேலும் இரண்டு பேர் காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர்
- ஏப்ரல் 3 ஆம் தேதி, அவள் தன் தோழியின் வீட்டிற்குச் சென்று போதைப்பொருளின் தாக்கத்தால் தூங்கிவிட்டாள். மாலையில், அவள் டேனிஷ் மற்றும் அவரது நண்பரைச் சந்தித்த நிலையில், அவர்களுடன் மேலும் 3 பேர் சேர்ந்து அவளை பாலியல் வன்கொடுமை செய்ததாக “ புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குகள் பதிவு:
புகார் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிராக பிரிவு 70(1) (கூட்டு பாலியல் வன்கொடுமை), 74 (அடக்கத்தை சீர்குலைத்தல்), 123 (விஷம் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருளை வழங்குதல்), 126(2) (நடவடிக்கையைத் தடுத்தல்), 127(2) (முறைகேடாக அடைத்து வைத்தல்), 351(2) (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் 18 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் கூறப்படுகிறது. தலைமறைவாகியுள்ள மற்றவர்களை தேடும் பணியை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.