சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் இருந்த போது பேருந்து நிலையத்தில் பெரிய பையுடன் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அவருடைய உடமைகளை சோதனை செய்த போது 9 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
அவரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பீர்க்கன்காரணை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கேரளா, திரிச்சூரை சேர்ந்த செபின்(23), என்பதும், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து சென்னையில் ஒட்டு மொத்தமாக விற்பனை செய்து விட்டு சொந்த ஊர் சென்று விடுவதை வாடிக்கையாக கொண்டவர் என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த பீர்க்கன்காரணை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்லாவரம் வார சந்தையில் கஞ்சா விற்பனை செய்ய திட்டம் தீட்டிய 3 பேர் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன், சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் கஞ்சா அமோகமாக விற்பனை நடைபெறுவதாக பள்ளிக்கரணை மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள முற்புதரில் சந்தேகத்திற்கு இடமாக நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர்.
அதனை தொடர்ந்து அவரின் கூட்டாளியான தாம்பரம் கடப்பேரி பகுதியைச் சார்ந்த சல்மான் ஹோசைன் (24) வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது 12 கிலோ கஞ்சா ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவரின் கூட்டாளியான ஆலம்கிர் ஹொசைன் (22) பிலால் மியா (23) உள்ளிட்டோரை தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற தாம்பரம் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திரிபுராவை சேர்ந்தவர் மூவரும் தாம்பரம் கடப்பேரி பகுதியில் அறை எடுத்து தங்கி தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்தும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்