கேரளாவில் 2006 ஆம் ஆண்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 ஆண்டுகள் கழித்து, அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள புல்லாட் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். ஆலப்புழா மாவட்டம் செங்கனூரில் தபால் துறையின் மூத்த கணக்காளராக பணியாற்றிய இவரின் மனைவி ரமாதேவி கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய  விசாரணையில், ரமாதேவி அணிந்திருந்த சில  நகைகள் காணாமல் போனதாக ஜனார்த்தனன் தெரிவித்திருந்தார். 


மறுநாள் அருகில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளி  முத்து மற்றும் உடன் வசித்த பெண்ணுடன் காணாமல் போன நிலையில், அவர் தான் குற்றவாளி என போலீசார் சந்தேகித்தனர். அங்கிருந்த பெண் ஒருவர் சம்பந்தப்பட்ட நபர் ரமாதேவி கொலை செய்யப்பட்ட நாள் அந்த பக்கம்  வந்ததை கண்டதாக கூற, விசாரணை தீவிரமானது. 
ஆனால் அவரைப் பற்றிய தகவல் தெரியாத நிலையில் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்றது. 


அப்போதைய முதல்வர் மற்றும் பிற அரசியல் தலைவர்களிடம் குற்றவாளியை போலீசார் விரைந்து கண்டுபிடிப்பதை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையில் ரமாதேவி கொலையில் சந்தேகம் இருப்பதாக தகவல்கள் பரவ, ஜனார்த்தனன் 2007 ஆம் ஆண்டு மந்தமாக விசாரணை நடைபெறுவதாக் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தனர். முத்து தான் குற்றவாளி என்ற அடிப்படையில் விசாரணை இருந்தது. 


இதற்கிடையில் 2008 ஆம் ஆண்டு ரமாதேவியின் கைகளில் கிடைத்த முடி மாதிரிகள் ஜனார்த்தனுடன் ஒத்துப்போனது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் அவரை யாரும் சந்தேகிக்கவில்லை. மேலும் முத்துவை கண்டுபிடிக்க ஜனார்த்தனன் போலீசாருக்கு உதவி செய்தார். இந்த குழு கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த முத்துவுடன் இருந்த பெண்ணை கண்டுபிடித்தனர். இதனால் வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டது. 


அவருடைய வாக்குமூலம் கொண்டு எல்லாவற்றையும் சரி பார்த்து  முத்து இந்த கொலையை செய்யவில்லை என்ற முடிவுக்கு சிபிஐ வந்தது. பின்னர் ஜனார்த்தனிடம் பலமுறை நடைபெற்ற விசாரணையில், அவர் கொடுத்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கொலை நடந்த ஓராண்டுக்குப் பிறகு ஜனார்த்தனன் வீடு, சொத்துக்களை விற்றுவிட்டு ஆரன்முலாவுக்குச் சென்றுவிட்டது மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. 


அவர் வீட்டின் உள்ளே மனைவி கொலை செய்யப்பட்டதாகவும், வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாகவும், தான் திறந்து உள்ளே சென்றேன் எனவும் கூறியுள்ளார். இது சந்தேகத்தை மேலும் அதிகமாக்க ஜனார்த்தனனை போலீசார் கைது செய்து விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். யாருமே ஜனார்த்தனன் கொலையாளியாக இருப்பார் என சந்தேகிக்கவே இல்லை. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.