உசிலம்பட்டி அருகே விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்ற கட்டிட தொழிலாளி - விசாரணை முடிந்து வீடு திரும்பியதும் மர்ம முறையில் மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வேடன் என்ற கட்டிட தொழிலாளி, இரவு காட்சி திரைப்படத்திற்கு எம்.கல்லுப்பட்டி சென்றுவிட்டு இன்று அதிகாலை 1 மணியளவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தாக கூறப்படுகிறது., நள்ளிரவு நேரத்தில் மது போதையில் நடந்து சென்ற வேடனை ரோந்து பணியில் இருந்த எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று சந்தேக வழக்கு பதிவு செய்துவிட்டு 3 மணியளவில் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்., வீட்டிற்கு சென்று தூங்கிய வேடன் காலை இறந்து கிடந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.,
இந்நிலையில் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியிருக்கலாம், அதனால் தான் உயிரிழந்திருப்பார் என குற்றம் சாட்டி வேடனின் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் போலீசாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி டி.எஸ்.பி., நல்லு முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தை அடுத்து முற்றுகை கைவிடப்பட்டது. தொடர்ந்து, வேடனின் உடல் உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றவர் விசாரணை முடிந்து வீட்டிற்கு வந்ததும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்