கேரளாவில் மருத்துவ மாணவி ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையின் பின்னணி அதிர வைப்பதாக உள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் மானஸா மாதவன் (24). இவர் கொத்தமங்கலம் பகுதியில் உள்ள காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டென்டல் சயின்சஸ் கல்லூரியில் ஹவுஸ் சர்ஜனாக பயின்றுவருகிறார். இவரை ரகில் ரகுதாமன் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குற்றம்.. நடந்தது என்ன?
எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் முனிசிபாலிட்டிகு உட்பட்ட நெல்லிக்குழி பகுதியில் வசித்துவந்தார் மானஸா. அவரும் அவருடன் படிக்கும் தோழிகள் சிலரும் அங்கு தங்கியிருந்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் கண்ணூரைச் சேர்ந்த ரகில், மானஸாவை சந்தித்துள்ளார். அவரை பின் தொடர்ந்துள்ளார். மானஸாவை தன் வசப்படுத்தும் நோக்கிலேயே அவர் கண்ணூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு குடிபெயர்ந்துள்ளார். ஜூலை 4 ஆம் தேதியன்று மானஸாவின் வீட்டின் அருகேயே ஒரு அறையெடுத்துள்ளார். மானஸாவுக்குத் தெரியாமலேயே அவரை தினமும் கவனித்துக் கொண்டே இருந்துள்ளார்.
இதனை ரகிலின் தொழில்முறை கூட்டாளியும், நண்பருமான ஆதித்யன் உறுதி செய்துள்ளார். மானஸாவுக்கு, ரகில் தன்னைப் பின் தொடர்வது தெரியவந்ததும் அவர் கண்ணூரில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் கூறியுள்ளார். மானஸாவின் தந்தை போலீஸில் புகார் கொடுக்க, காவல் உதவி கண்காணிப்பாளர் சதானந்தன் அவரை அழைத்துக் கண்டித்துள்ளார். அப்போது ரகில் இனி மானஸாவை பின் தொடர மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் மலர்ந்த நட்பு:
போலீஸ் விசாரணையில் மானஸாவுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு தொடங்கியிருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் மானஸா, ரகிலின் நோக்கம் அறிந்து அவரைத் தவிர்த்துள்ளார். ஆனாலும் ரகிலால் மானஸாவை மறக்க முடியவில்லை. கடைசியாக ஒரு முறை பார்த்துப் பேசிவிடுகிறேன் என்று கெஞ்சியுள்ளார். மானஸாவும் சரியென்று சொல்லவே அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு துப்பாக்கியை எடுத்து மானஸாவை சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ரகிலின் சகோதரர் ராகுல் கூறுகையில், அண்ணனுக்கு இது இரண்டாவது காதல் முறிவு. மானஸாவைப் பிரிந்தபின்னர் ரொம்பவே அழுத்தத்தில் இருந்தான். எப்படியும் மீண்டு வருவான் என்றே நினைத்தோம். இதுபோன்றதொரு குற்றத்தைச் செய்வான் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று கூறினார்.
கள்ளத்துப்பாக்கி வாங்கிய ரகில்..
ரகில், மானஸாவை கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கியை வாங்கியுள்ளார். இதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவழித்து கள்ளத்துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளார். அந்தத் துப்பாக்கியை ரகில் எங்கு, யாரிடமிருந்து வாங்கினார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். வெடிபொருள் நிபுணர் சாஜூ டி தாஸ் என்பவர் கூறுகையில் ரகில் பயன்படுத்திய துப்பாக்கி சுமார் 4 லட்சமாவது இருக்கும் என்று கூறியுள்ளார்.
இணையம், அனைத்தையும் விரல் நுனியில் கொண்டு வந்துள்ளது. அதன் காரணமாகவே முகம் தெரியாதவர்களுடன் நட்பும் மலர்ந்து விடுகிறது. அப்படி உருவாகும் நட்புக்கள்தான் பெரும்பாலும் சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது என்று சொல்லப்படுகிறது. பெண்கள் மீது நிகழும் குற்றங்களுக்கு ஆண்களை ஆண் மேட்டிமைத்தனத்துடன் வளர்க்கும் சமூகமும் காரணமாகிறது.