இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு குற்றம் நடைபெற்றுள்ளது. கல்லூரியில் பயின்று வரும் மாணவியை அக்கல்லூரியின் டீன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்லூரியில் மாணவி ஒருவர் பயின்று வந்துள்ளார். அந்தக் கல்லூரியில் சுனில்குமார் என்பவர் டீனாக பணியாற்றி வருகிறார். கொரோனா காரணமாக கடந்த சில மாதங்கள் கல்லூரியின் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் இந்த மாணவி கல்லூரியின் டீன் வீட்டில் தங்கியிருந்ததாக தெரிகிறது. அந்த வீட்டில் டீன், அவரது மனைவி மற்றும் இந்த கல்லூரி மாணவி ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
இந்தச் சூழலில் தன்னுடைய மனைவி ஒருநாள் வெளியே சென்ற நேரத்தில் டீன் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த விஷயத்தை வெளியே கூறினால் அவரின் படிப்பு நின்றுவிடும் என்றும் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அப்பெண் கடும் மன உளச்சலுக்கு உள்ளாகி வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் கல்லூரி திறந்த பிறகு இந்த மாணவி திடீரென தற்கொலை முயற்சி செய்துள்ளார். அப்போது இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து கல்லூரி டீன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அந்தப் போராட்டத்தை அடுத்து டீன் சுனில்குமார் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருந்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. திருச்சூர் வடக்கு காவல்துறையினர் சுனில்குமாரை கைது செய்துள்ளனர். அவரிடம் காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவியை டீன் ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்