கேரள மாநிலம் வண்டிப்பெரியார் எஸ்டேட்டில் உள்ள 6 வயது சிறுமியினை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததோடு அச்சிறுமியினை கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் கேரளத்தில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த மாநிலத்தில் பிழைக்க வழியின்றி வேறு மாநிலத்திற்கு சென்று வேலைபார்த்து வரும் நிலை பல்வேறு பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான குடும்பங்கள் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். குடும்ப சூழலைக் கருத்தில்கொண்டு தங்களுடைய குழந்தைகளை அக்கம்பக்கத்தினரை நம்பி விட்டுவிட்டு , கணவன், மனைவி என இருவரும் எஸ்டேட்டில் கூலி வேலைக்கு சென்று விடுகின்றனர். அப்படித்தான் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதியில் உள்ள லாயம் எஸ்டேட்டில் பணிபுரியும் கூலித்தொழிலாளர்கள் தங்களுடைய 6 வயது மகளை வீட்டில் தனியாக விட்டுச்சென்றுவிட்ட நிலையில் மீண்டும் திரும்பி வந்து பார்த்தப்பொழுது அச்சிறுமி இறந்து கிடந்துள்ளார். என்ன நடந்தது என்று கூட அவர்களால் யோசிக்க முடியாத நிலை? உடனடியாக குழந்தையினை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர் அச்சிறுமியின் பெற்றோர்கள்.
மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்ததில், ஏற்கனவே சிறுமி இறந்து விட்டார் எனவும், மேலும் கொடூரமாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளார் என அதிர்ச்சித் தகவலை மருத்துவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் எப்படி இந்த குழந்தை இறந்தது? யார் பாலியல் வன்கொடுமை செய்திருப்பார்கள்? என்று எதுவும் தெரியாமல் பெற்றோர்கள் கலக்கத்தில் இருந்ததோடு சிறுமியின் இறுதி சடங்கும் நடத்தப்பட்டது. காவல்துறை இச்சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதால் இறுதி சடங்கில் போலீசாரும் கலந்து கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் குழந்தையின் பெற்றோரை விட அப்பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் என்ற இளைஞன் கதறி அழுதுள்ளான். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் யார் இவர்? என விசாரிக்க ஆரம்பித்ததோடு, சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காகவும் அழைத்து செல்ல முயற்சித்தனர். ஆனால் அர்ஜூன் என்ற இளைஞன் நல்லவன், ஏன் இவரை விசாரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதனையும் மீறிய போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். ஆனால் விசாரணையில் எந்த தகவலும் அவரிடம் இருந்து கிடைக்கப்பெறவில்லை. இதனையடுத்து அக்கம் பக்கத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியப்போதுதான், சம்பவம் நடந்த ஜூன் 30-ஆம் தேதியன்று அர்ஜூன் என்ற இளைஞனை அப்பகுதியில் சிறுமியுடன் பார்த்ததாக சிலர் கூறியுள்ளனர்.
இதனையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய போது போலீசாரே அதிர்ச்சியில் உறையும் வாக்குமூலம் ஒன்று அர்ஜூனிடமிருந்து கிடைத்துள்ளது. அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் சிறுமியினை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், வீட்டில் யாரும் தனியாக இல்லாதப்போது அடிக்கடி சிறுமியினை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாக தெரிவித்துள்ளார். இப்படி தான் எப்பொழுதும்போல சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியபோது அச்சிறுமி மயங்கிவிட்டார். இதனையடுத்து யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக, ஊஞ்சல் கயிற்றில் சிக்கி உயிரிழந்துள்ளது போல் ஏற்பாடு செய்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. நல்ல நண்பனாக குடும்பத்தினரிடம் பழகி, குழந்தையைக் கொடூரமான பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ள சம்பவம் கேரளத்தில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அர்ஜூன் என்ற இளைஞன், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் DYFI உறுப்பினர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.