காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் வீரபத்ர சிங். ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த அவர் அந்த மாநிலத்தின் தவிர்க்க முடியாத அரசியல்வாதியாக திகழ்ந்து வந்தவர். 87 வயதான இவர் தற்போது அந்த மாநிலத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள அர்கி என்ற சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அவர் சிகிச்சை முடிந்து கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சிம்லா வந்தடைந்தார். ஆனாலும், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட காரணத்தால் அவர் மீண்டும் சிம்லாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவருக்கு கடந்த மாதம் 11-ந் தேதி மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையால், மீண்டும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டார். இருப்பினும் அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், வீரபத்ர சிங் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 87 வயதான வீரபத்ர சிங் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஹிமாச்சல பிரதேசத்தின் முதல்-அமைச்சராக 5 முறை பொறுப்பு வகித்தவர். 1983ம் ஆண்டு முதன்முறையாக முதல்வராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட வீரபத்ர சிங் 1985 ஏப்ரல் வரையும், பின்னர் 1985 முதல் 1990 வரையும், 1993ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரையும், 2003ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையும், 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையும் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தின் சட்டசபை உறுப்பினராக 9 முறை பதவி வகித்துள்ளார். 5 முறை எம்.பி.யாக பொறுப்பு வகித்துள்ளார். 1998ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை மாநில எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். வீரபத்ர சிங்கிற்கு பிரதீபா சிங் என்ற மனைவியும், விக்ரமாதித்ய சிங் என்ற மகனும், அபிலாஷா குமாரி என்ற மகளும் உள்ளனர்.
அவரது மனைவி பிரதீபா சிங் மாண்டி மக்களவை தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார். அவரது மகன் விக்ரமாதித்ய சிங் சிம்லா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார், வீரபத்ர சிங் மறைவை முன்னிட்டு அந்த மாநிலத்தின் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், காங்கிரஸ் தலைவர்கள் உள்பட நாட்டின் பல அரசியல் தலைவர்களும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.