கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக ஊடங்களில் ஒருவர் பரப்பியுள்ளார். இதையடுத்து, அந்த நபரை 59 பெண்கள் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. இந்த நிலையில், அந்த நபரை தாக்கிய அனைவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் திருச்சூர் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சரமாரியாக தாக்கிய பெண்கள்:
குற்றம் சாட்டப்பட்டவர்கள் திருச்சூரில் உள்ள ஒரு ஆன்மிக மையத்தின் பக்தர்கள் என்று கூறப்படுகிறது. தாக்கப்பட்ட ஷாஜி என்ற நபர் கடந்த வியாழக்கிழமை மாலை ஒரு காரில் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்துள்ளார். அப்போது காரை மறித்த அந்த பெண்கள் குழு, அந்த நபரை இழுத்து சென்று, இரக்கமின்றி சரமாரியாக அடித்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் குறிப்பிட்ட சில பெண்கள் அவரை கட்டையால் தாக்குவதை காணலாம். இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஷாஜி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஆன்மிக மையத்தில் வளாகத்திற்கு வெளியே சம்பவம் நடந்தபோது அவரைத் தவிர, அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து பேரும் காரில் இருந்தனர். அவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதுடன், வாகனத்தின் கண்ணாடியும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மார்பிங்:
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, நானும் என் குடும்பத்தினரும் ஆன்மீக மையத்தில் இருந்து விலகினோம். இதனால் ஆத்திரமடைந்த ஒரு சிலர் ஒரு பெண்ணை நான் தவறாக மார்பிங் செய்துவிட்டதாக பொய் கூறினர். இதை தவறாக புரிந்துகொண்டு பெண்கள் என்னை தாக்கினர்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிஎஸ்-ன் 307, 143, 147, 144, 128 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 11 பெண்கள் ஏற்கனவே ரிமாண்ட் செய்யப்பட்டு விய்யூரில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், குற்றசாட்டப்பட்டவர்களையும் தேடி வருவதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.