2023ஆம் ஆண்டுக்கான பொங்கல் தினத்தன்று எஸ்.பி.ஐ. எழுத்தர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. இதற்கிடையே தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
எஸ்.பி.ஐ. எனப்படும் இந்திய ஸ்டேட் வங்கி சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மொத்தம் 355 பணி இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்ப அண்மையில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகின.
எஸ்.பி.ஐ. தேர்வு:
இந்த நிலையில், இதில் வெற்றி பெற்றோருக்கு முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வுகள் ஜனவரி 15ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன. ஜனவரி 15ஆம் நாள் தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள தேர்வர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தென் சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ''தமிழர் திருநாளும் தை முதல் நாளுமான வரும் ஜனவரி 15-ம் நாள் தைப் பொங்கல் மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தில், எஸ்.பி.ஐ வங்கிப் பணிகளுக்கான எழுத்தர் தேர்வு நடைபெறும் என அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
இதுகுறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். தேர்வு நாள் குறித்த அறிவிப்பு உடனடியாக மாற்றியமைக்கப்படும் என நம்புகிறேன்'' என்று தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: Rural Skill Development Scheme: 70% பேருக்கு வேலை உத்தரவாதம்.. அரசு வழங்கும் இலவச திறன் பயிற்சி.. எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
KVB Job Vacancy: வங்கி வேலை வேண்டுமா? பிரபல தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு; முழு விவரம்!