கேரளாவில் உள்ள ஒரு ரெசார்ட்டில் பெரிய அளவில் போதைப் பொருட்கள் கைமாறியதும், போதை பார்ட்டி என்ற பெயரில் இரவு நடன பார்ட்டிகள் நடத்தப்பட்டதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 17க்கும் அதிகமான இரவு போதை பார்ட்டி நடத்தப்பட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் உள்ள காரைக்காடு ரெசார்ட் ஒன்று போதையின் உலகமாகவே திகழ்ந்துள்ளது. பூவார் தீவில் உள்ள அந்த ரெசார்ட்டுக்கு மும்பை, கோவா, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து பெருமளவில் போதைப்பொருட்கள் வந்துள்ளன. ரெசார்ட்டில் போதை இரவு பார்ட்டி நடத்தப்பட்டு அங்கிருந்து போதைபொருட்கள் கைமாறியும் சென்றுள்ளன. பூவார் தீவில் போதை பார்ட்டி நடப்பதாக கேரள போதை தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
அதன்படி அக்ஷயாமோகன் என்பவரே இந்த போதை பார்ட்டியை நடத்தியுள்ளார். இந்த போதை பார்ட்டியின் பின்னால் சில மாடல்களும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. போதை பார்ட்டிக்கு வந்தவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த பார்ட்டி வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இல்லாமல், இதற்கு பின்னால் போதைப்பொருள் கைமாற்றுவதும், பெரிய தொகை கைமாறும் இடமாகவும் அந்த ரெசார்ட் இருந்துள்ளது. அது தொடர்பான ஆதாரங்களை திரட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சில மாடல்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில் தற்போது அவர்கள் ஜாமினில் வெளிவந்துள்ளனர்.
வெளியான தகவலின்படி போதைக்கும்பலின் திட்டத்தின்படி இந்த போதை பார்ட்டி நடத்தப்பட்டுள்ளது. இதற்காக பல வாட்ஸ் அப் குரூப்களும் இயங்கியுள்ளன. கேரளாவில் போதைபார்ட்டி நடப்பது போலவே இமாச்சலப் பிரதேசத்திலும் பார்ட்டி நடத்தப்படுவதாகவும், கேரளாவில் பார்ட்டி நடத்தும் அதே கும்பல்தான் வட மாநிலங்களிலும் நடத்தி வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீசார் விரைவில் பல உண்மைகளை வெளிக்கொண்டு வருவார்கள் எனத் தெரிகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்