இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர்கள் ஒருவர் யுவராஜ் சிங். இவர் 2011 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன்பின்னர் அவரால் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியவில்லை. இதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். 


எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் ஒரு பதிவை செய்திருந்தார். அதில், “கடவுள் தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறார். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் வரும் பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் களத்திற்கு வருவேன்” எனப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவிற்கு பின் அனைவரும் கிரிக்கெட் களத்தில்  யுவராஜ் சிங் தன்னுடைய  இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க விருக்கிறார் என்று கூறி வந்தனர். 




இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு விளம்பர படம் ஒன்றில் நடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சந்தித்துள்ளார். மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இருவரும் நீண்ட நாள் நண்பர்கள். இவர் இருவரும் பல முறை பார்ட்னர்ஷிப் செய்து இந்திய அணிக்கு நல்ல ஃபினிஷிங்கை தந்திருக்கிறார்கள். மேலும் தோனியின் கேப்டன்ஷிபில் யுவராஜ் சிங் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3077 ரன்கள் அடித்துள்ளார். 






குறிப்பாக மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக யுவராஜ் சிங் இருந்தார். இந்தச் சூழலில் நீண்ட நாட்களுக்கு பிறகு இரு நண்பர்களும் இணைந்துள்ள படம் சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்தச் சந்திப்பு தொடர்பாக யுவராஜ் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். யுவராஜ் சிங் மீண்டும் களத்திற்கு வருவேன் என்ற கூறிய பிறகு இந்த சந்திப்பு நடந்துள்ளது. தற்போது கிடைத்திருக்கும் ஒரு சில தகவல்களின் படி யுவராஜ் சிங் பயிற்சியாளராக களமிறங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் ஒரு ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக வரலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது. எனினும் இந்த தகவல் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: கேப்டன்சியை பகிர்ந்தளிக்கும் திட்டத்தில் பிசிசிஐ: ஒரு நாள் போட்டிக்கான் கேப்டனாக ரோஹித்!