கரூர் அருகே கிணற்றில் தூர்வாரும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்ததில் இருவர் படுகாயம் அடைந்தனர். கிணற்றில் சிக்கிக் கொண்ட இவர்களை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 


 




 


கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு அருகே உள்ள குள்ளம்பட்டி என்ற கிராமத்தில் தண்ணீர் இல்லாத வறண்ட விவசாய கிணற்றில் தூர் வார சந்தோஷ் குமார், சரவணன், சாமிநாதன், ஆனந்த் ஆகிய 4 கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


 




 


இதில் சந்தோஷ் குமார் (24), சரவணன் (33) ஆகிய இருவர்  ராட்டை (கயிறு) அறுந்து விழுந்து மயக்கமுற்ற நிலையில் கிணற்றினுள் விழுந்துள்ளனர்.


 




 


தகவல்  அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் உதவி மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில் மீட்பு குழுவினர் உடனடியாக கிணற்றில் இறங்கி கயிறு மூலம் ஸ்ட்ரெச்சரில் கட்டி காயமடைந்தவர்களை உயிருடன் மேலே பாதுகாப்பாக மீட்டு கொண்டு வந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.


குட்கா விற்ற 16 பேர் மீது வழக்கு


கரூர் மாவட்டம் முழுவதும் குட்கா விற்பனை செய்ததாக 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து மூன்று கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து அந்தந்த காவல் நிலைய போலீசார்களால் குட்கா விற்பனை செய்யப்படும் நிகழ்வு குறித்து கண்காணித்து வழக்கு பதியப்பட்டு குட்கா பொருள்கள் பறிமுதல்  செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கரூர், தாந்தோணிமலை, பசுபதிபாளையம், வெள்ளியணை, மாயனூர், லாலாபேட்டை, வெங்கமேடு, ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 16 பேர்கள் மீது வழக்கு பதியப்பட்ட அவர்களிடம் இருந்து மூன்று கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கிருஷ்ணராயபுரம் அருகே தடை செய்த புகையிலை விற்ற முதியவர் உட்பட 3 பேர் கைது.


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி போலீசார் சோதனையில் ஈடுபட்டதில் மேட்டு திருக்காம்புலியூரை சேர்ந்த சுப்பிரமணி, கீழ சக்கரக்கோட்டை சேர்ந்த லோகநாதன், காணி ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபு, ஆகியோரை மாயனூர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.