கரூர் அருகே தனியார் காட்டன் ஆலையில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் கூலி வேலை செய்துவந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு ஆலை நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், கொசுவலை தயாரிப்பு ஆலைகள், விசைத்தறிக் கூடங்கள் பல்வேறு தனியார் ஆலைகள் மற்றும் கட்டிட வேலைகள் போன்றவற்றில் வட மாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்து வருகின்றனர். இதில் சட்டவிரோதமாக அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவி வேலை செய்யும் நபர்களைப் பற்றி, வாடகைக்கு வீடு கொடுப்பவர் மற்றும் வேலை கொடுக்கும் நிறுவனங்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுக்க வேண்டுமென அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த தம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் காட்டன் ஆலையில் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் தங்கி வேலை செய்து வருவதாக வெள்ளியணை போலீஸாருக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில், காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீஸ் குழு ஒன்று தம்மநாயக்கன்பட்டி சென்று, சம்பந்தப்பட்ட ஆலையில் அதிரடி சோதனை செய்திருக்கின்றனர்.
அப்போது பாஸ்போர்ட், விசா என எதுவும் இல்லாமல் அங்கு தங்கி வேலை பார்த்து வந்த ஜமிருல், சகுர் (எ) சைபூர், சிமுல் உசேன், அஜ்மீர் மமூன், ஆஷிக் ஹசார் ஆகிய 5 நபர்களையும் கைது செய்த போலீசார், வெள்ளியணை காவல் நிலையம் அழைத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஜமிருல், சகுர் (எ) சைபூர் ஆகிய இரண்டு பேரும் கடந்த மூன்று நாட்களாகவும், சிமுல் உசேன், அஜ்மீர் மமூன், ஆஷிக் ஹசார் ஆகிய 3 பேர் கடந்த ஆறு மாதங்களாக அந்த நிறுவனத்தில் சட்ட விரோதமாக பணிபுரிந்து வந்துள்ளனர்.
அதேபோல் பாஸ்போர்ட், விசா என எதுவும் இல்லாமல் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 5 நபர்களை பணியில் அமர்த்திய தனியார் ஆலை நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை, வெள்ளியணை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பாக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஐந்து நபர்களையும் அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்த பிறகு போலீசார் வாகனம் மூலம் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் நீதிமன்ற நீதிபதி உத்தரவுக்கிறாங்க அவர்களை புழல் சிறையில் அடைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கரூரில் தனியார் காட்டன் ஆலையில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் வங்கதேசத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் கரூர் மட்டுமல்லாது தமிழகத்தையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் இது போல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் எண்ணிக்கை மற்றும் அவர்களின் விவரம் குறித்து கேட்டறிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.