இந்தியாவின் பொருளாதார நிலப்பரப்பை வடிவமைத்ததில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்றென்றும் நினைவுகூரப்படுவார் என்று முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகாலம் பதவி வகித்தார். பொருளாதார நிபுணரான இவர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்துள்ளார். மத்திய நிதி அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அதேபோல பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் என்று பல்வேறு முக்கியப் பதவிகளையும் வகித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.


92ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் மன்மோகன் சிங்


1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி இப்போது பாகிஸ்தானாக இருக்கும் அன்றைய பஞ்சாப் பகுதியில் பிறந்தவர் மன்மோகன் சிங். அவர் தனது 92ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.  அவருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.






இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:


’’இந்தியாவின் பொருளாதார நிலப்பரப்பை வடிவமைத்ததில் அவரது தொலைநோக்கு தலைமை மற்றும் மதிப்பற்ற சேவை என்றென்றும் நினைவுகூரப்படும். அவர் தனது அறிவு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்க வாழ்த்துகள்.’’


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


டாக்டர் மன்மோகன் சிங் பொது வாழ்க்கையில் பல்வேறு விருதுகளையும், பெருமைகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண், இந்திய அறிவியல் மாநாட்டில் ஜவஹர்லால் நேரு நுற்றாண்டு பிறந்த நாள் விருது, சிறந்த நிதியமைச்சராக இருந்ததற்காக ஆசியச் செலாவணி விருது, சிறந்த நிதியமைச்சருக்கான யூரோ செலாவணி விருது உள்ளிட்டவற்றை மன்மோகன் சிங் பெற்றுள்ளார்.