சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு இன்று நிபந்தனையுடன் கூடிய ஜாமினை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இதை செந்தில் பாலாஜி ஆதரவாளர்களும், தி.மு.க. தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்.
நிபந்தனைகள் என்னென்ன?
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “ உச்சநீதிமன்றம் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 15 மாதங்களுக்கு மேலாக விசாரணை குற்றவாளியாக இருந்ததால், அதைக்கருத்தில் கொண்டு அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது.
ஜாமினில் விதித்துள்ள நிபந்தனையின்படி அவர் 25 லட்சம் ரூபாய்க்கு 2 நபர்கள் ஜாமின் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு திங்கள்கிழமையும், வெள்ளிக்கிழமையும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இந்த அனைத்து குற்றவியல் நடைமுறைகளுக்கும் அவர் ஒத்துழைப்பு தர வேண்டும். தேவையில்லாமல் வாய்தா வாங்கக்கூடாது. சாட்சிகளை கலைக்கக்கூடாது.
ஒன்றிய அரசின் அடக்குமுறை:
உச்சநீதிமன்றம் சமீபகாலமாகவே ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட பல அமலாக்கத்துறை வழக்குகளில் தனி மனித உரிமைகளை பாதிப்பதாக இந்த சிறையில் வைத்து ஜாமினே கொடுக்க இயலாத நிலையை கண்டித்துதான் வருகிறது. மணிஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற அனைத்து வழக்குகளிலும் ஜாமினே கொடுக்க இயலாத என்ற ஒன்றிய அரசின் வாதத்தை அடக்குமுறையாகவே பார்த்து உச்சநீதிமன்றம் அனைத்து வழக்குகளிலும் ஜாமின் வழங்கி வருகிறது.
அமலாக்கத்துறை கைதை எதிர்த்து அவர் வழக்கு போடவில்லை. அமலாக்கத்துறைக்கு விசாரிக்க உரிமை இருக்கிறதா? என்றுதான் அவர் வழக்காக போட்டிருந்தார். அதை உச்சநீதிமன்றம் 3 அல்லது 5 நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்பியிருக்கிறார்கள். செந்தில் பாலாஜி இன்று மாலை அல்லது நாளை காலை சிறையில் இருந்து வெளியே வருவார்.
மீண்டும் அமைச்சர் ஆகிறாரா?
செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் ஆவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை, காலதாமதம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டது முதன்மை வழக்குகள் விசாரணை முடிந்து, அடுத்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து விசாரிக்க நீண்ட நாட்கள் ஆகும் என்பதாலும் பிணை வழங்கப்பட்டுள்ளது. நிபந்தனையில் அமைச்சர் ஆவதற்கு எதிராக எந்த சட்டப்பூர்வமான தடையும் இல்லை.
இந்த உத்தரவை முதன்மை நீதிமன்றம் சென்னைக்கு கொடுத்து சிறை அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். உச்சநீதிமன்றம் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக அடிப்படை உரிமைகளுக்கு எதிராக எந்த சட்டமும், யாரையும் நீண்ட நாட்களுக்கு யாரையும் சிறையில் வைக்க முடியாது என்று கூறியுள்ளது. இதன் விசாரணை நடந்து முடிக்க நீண்ட காலம் ஆகும். அனைவருக்கும் வழங்கக்கூடிய பொதுவான நிபந்தனையே இவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.“
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார்.