கரூர் அருகே உள்ள திருமாநிலையூர் சேர்ந்தவர் சிவா என்கின்ற செல்வராஜ் (வயது 52). சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி சத்யா என்கிற சந்தியா (வயது 40). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சிவா, சந்தியா தம்பதி தாந்தோணி மலை நகர் பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வந்தனர். இந்நிலையில் சிவா கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளார். இதனால் சத்யா சித்தாள் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சிவாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அடிக்கடி கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சத்யா வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சிவா காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து சத்யாவை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் சிவா சற்று தொலைவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தனது மூத்த மகனிடம் நடந்த விபரத்தை கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதனால் பதறி அடித்துக் கொண்டு சத்யாவின் மூத்த மகன் வீட்டிற்கு வந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், தாய் சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தான்தோன்றி மலை போலீசார், மருத்துவமனைக்கு வந்து சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிந்து சிவாவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தாந்தோணி மலைப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
குளித்தலையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை.
கரூர் மாவட்டம், குளித்தலை ரயில் நிலையம் அருகே தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நடந்த 2021 ஆம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவரை கல்லூரியின் முதல்வரும், குளித்தலை காவிரி நகரை சேர்ந்த வக்கீலுமான செந்தில்குமார் பலமுறை பாலியல் தொந்தரவு செய்து, திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு கல்லூரியின் விடுதி காப்பாளராக பணிபுரியும் அமுதவள்ளி மற்றும் கல்லூரியில் படித்துக் கொண்டு சமையல் மற்றும் பராமரிப்பு பணி செய்து வந்த மற்றொரு மாணவி ஆகிய இருவரும் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் செந்தில்குமார் அமுதவள்ளி உள்பட 3 பேர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒருவரான அந்த தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டு சமையலராக இருந்த கல்லூரி மாணவியை அவரது சொந்த ஊரிலேயே, குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் கடந்த மே மாதம் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நர்சிங் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் மற்றும் விடுதிக்காப்பாளர் அமுதவள்ளி ஆகிய இரண்டு பேரையும் கடந்த மாதம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.
இதை அடுத்த கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவனம் வேண்டுகோளின் பேரில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் படி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில்குமார் மற்றும் அமுதவல்லி ஆகிய இரண்டு பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. இதற்கான கடிதத்தை சிறையில் இருந்த அவர்களிடம், குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழங்கினர்.