கரூர் மாவட்டம், குளித்தலை தெப்பக்குளத் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். இவர் தனது வீட்டின் தரை தளத்தில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையினை குடோனுடன் நடத்தி வருகிறார்.
இந்த பழைய இரும்பு குடோனில் செம்மரக்கட்டை பதுக்கி வைத்திருப்பதாக குளித்தலை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் கரூர் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதன் பேரில் கரூர் மாவட்ட வன சரகர் சரவணன் உத்தரவின் பேரில் வன அலுவலர் தண்டபாணி தலைமையில், வனவர்கள் சாமியப்பன், கோபிநாத் ஆகியோர் குளித்தலை தெப்பக்குளம் தெருவில் உள்ள பழைய இரும்பு குடோனில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த செல்ல பாண்டியனை கைது செய்தனர். பின்னர் அவரை குளித்தலை குற்றவியல் நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் மணப்பாறை கிளை சிறையில் அடைத்தனர்.
சம்பவம் குறித்து வன அலுவலர் தண்டபாணி கூறியதாவது: பழைய இரும்பு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரங்கள் பல மாதங்களுக்கு முன்பு வெட்டப்பட்டு இருக்கலாம் என்றும் இது சுமார் ஒரு டன் இருக்கும் என்றும், இதனை கரூர் வன அலுவலகத்திற்கு கொண்டு செல்வதாகவும், செம்மரக்கட்டை பதுக்கி வைத்து இருந்தன் பின்னணியில் ஒரு கூட்டமே இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் எனவும் இதன் பின்னணி குறித்து தொடர் விசாரணை நடைபெறும் எனவும் கூறினார்.