காலியாக அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


2024ம் ஆண்டு தேர்தலுக்காக பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜகவும், இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் வகையில், நடப்பாண்டில் மட்டும் 9 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பிட்ட தேர்தலில் கிடைக்கும் முடிவுகள் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மீதான, மற்ற மாநில மக்களின் பார்வையை மாற்றும் என்பதால், இந்த தேர்தல் முடிவுகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 






தேர்தல் தேதி அறிவிப்பு:


அந்த வரிசையில் முதலாவதாக வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று மாலை முதலே குறிப்பிட்ட மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வர உள்ளன. நாகாலந்து சட்டப்பேரவை ஆயுட்காலம் மார்ச் 12ம் தேதியும், மேகாலயா சட்டப்பேரவை ஆயுட்காலம் மார்ச் 15ம் தேதியும் மற்றும் திரிபுராவின் சட்டப்பேரவை ஆயுட்காலம் மார்ச் 22ம் தேதியும் நிறைவடைய உள்ளது. இதை முன்னிட்டு, குறிப்பிட்ட 3 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்:


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைதேர்தல் தேதியையும், தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சட்டமன்ற விவரம்:


60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில், முதலமைச்சர்  நெய்பியு ரியோ தலைமையில் நாகாலாந்து ஜனநாயக மக்கள் முன்னணி கட்சி ஆட்சி செய்து வருகிறது. மேகாலாயா சட்டமன்றமும் 60 உறுப்பினர்களை கொண்டுள்ள நிலையில், முதலமைச்சர் கான்ரட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி அங்கு ஆட்சி செய்து வருகிறது. 60 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மற்றொரு மாநிலமான திரிபுராவில், முதலமைச்சர் மணிக் சாஹா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரே கட்டமாக தேர்தல்?


இந்த 3 மாநிலங்களிலும் பாஜக ஏற்கனவே தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், வடகிழக்கு மாநிலங்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், திரிபுரா மட்டுமின்றி நாகாலாந்து மற்றும் மேகாலயவிலும், பாஜக மற்றும் பிற கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவே வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்: 


கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான்,மிசோரம், சத்தீஷ்கார் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் நடப்பாண்டில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.