முன் விரோதத்தில் கிணற்றில் தள்ளி பெண் கொலை


கரூர் மாவட்ட, தோகைமலை அருகே முன் விரோதத்தில் களை குத்தியால் பெண்ணை தாக்கி கிணற்றில் தள்ளி கொலை செய்த மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்களை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 




தோகை மலையை அடுத்த பில்லூர் பஞ்சாயத்து பெரிய வீட்டுக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி 45. இவரது மனைவி வசந்தா 39. இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் தனது வயலுக்கு களை எடுக்கச் சென்றார். வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் வசந்தாவை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது விவசாயத் தோட்ட கிணற்றில் நேற்று முன்தினம் இரவு வசந்தா சடலம் மிதந்தது. தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று சடலத்தை மீட்டனர். 


 




முன்விரோத காரணமாக கொலையான வசந்தா புகைப்படம்


மேலும், தோகைமலை போலீசாரும் சம்பவ இடத்துக்குச் சென்று உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது மனைவியின் சாவில் சந்தேகமுள்ளதாக முத்துசாமி தோகைமலை போலீசில் புகார் அளித்தார் . அதன் பெயரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த சரோஜா வசந்தா கொலை செய்தது தெரியவந்தது. 


 





 


இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுய உதவிக் குழுவில் சரோஜா கடன் வாங்கிய பணம் திருடுப் போனது, வசந்தா தான் தனது பணத்தை திருடி விட்டதாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 


 


 




இந்நிலையில், நேற்று முன்தினம் வசந்தா வயலில் களை எடுத்துக் கொண்டிருந்த போது அந்த வழியே வந்த சரோஜாவை கண்டு எச்சில் துப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் களை குத்தியால் வசந்தாவை தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்தார். பின்னர், அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக தெரிவித்தனர். இந்த வழக்கில் சரோஜாவை போலீசார் கைது செய்தனர். 


 




 


உறவினர்கள் சாலை மறியல். 


சரோஜாவுக்கு உடந்தையாக அவரது கணவர் முருகேசன், மருமகள் ஆகியோர் இருந்ததாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வசந்தாவின் குடும்பத்தினர் உறவினர்கள் குளித்தலை மணப்பாறை சாலையில் தோகைமலை போலீஸ் ஸ்டேஷன் முன்பு நேற்று மதியம் 2 மணி அளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சரோஜாவை போலீசார் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.