தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி பெங்களூரில் இருந்து சென்னைக்கு இன்று தொடங்கி வைத்தார். கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்த பிறகு பிரதமர் மோடி இன்று நண்பகல் தமிழ்நாட்டிற்கு வருகிறார்.


திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார். இந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கிறார். இசைத்துறையில் இளையராஜா ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு இந்த கவுரவ பட்டம் வழங்கப்படுகிறது.


பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்திலும், அந்த பகுதி முழுவதிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காந்தி கிராம பல்கலைகழகத்தில் பிரதமர் மோடி இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமின்றி, மிருதங்க இசை சக்கரவர்த்தியான உமையாள்புரம் சிவராமனுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார்.


பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலமாக புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு 2 மணிக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காந்திகிராமம் செல்கிறார். வானிலை நிலவரத்தை பொறுத்து பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் செல்வாரா? அல்லது தரை மார்க்கமாக செல்வாரா? என்பது முடிவு செய்யப்படும்.


பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் காந்தி கிராம பல்கலைகழகத்திற்கு வருகை தர உள்ளதால் மதுரை முதல் திண்டுக்கல் வரையிலும், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தீவிர வரவேற்பு அளிக்க இரு கட்சியினரும் திட்டமிட்டுள்ளனர். மேலும், இளையராஜாவும் வருகை தர உள்ளதால் அவருக்கும் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர்.