ஆன்லைன் மூலமாக ரூ.55 ஆயிரம் மோசடி செய்த வடமாநில வாலிபரை கரூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 9.10.2021ஆம் தேதி யூ-டியூப்-ல் ஒரு விளம்பரத்தை பார்த்து பேபி டிரஸ் மற்றும் சேலை ஆர்டர் செய்து போன் பே மூலம் ரூ.420 செலுத்தியுள்ளார். பின்னர் 10 நாட்கள் ஆகியும் ஆர்டர் செய்த பொருட்கள் வரவில்லை என்பதால் அந்த விளம்பரத்தின் இணையதளத்தில் உள்ள போன் நம்பரில் இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது எதிர்முனையில் இருந்து பேசியவர் சரிபார்ப்பதாக கூறி போனை வைத்த உடன் ஆர்டர் செய்தவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.54 ஆயிரத்து 999 பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கரூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து தொலைபேசி எண்களை வைத்து விசாரணை செய்தனர். விசாணையில் ஜார்கண்ட் மாதிலத்தை சேர்ந்த இன்டாஜ் அன்சாரி (வயது 25) என்பவர் குற்றச்செயவில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். இதில் இன்டாஜ் அன்சாரி, ஜார்கண்ட் மாநிலம், தேவ்கார் மாவட்டம், தியோகர் சைபர் போலீஸ் நிலைய குற்ற வழக்கில் ஜார்கண்ட் மாநிலம், தியோகர் மத்திய சிறையில் இருக்கும் விவரம் தெரிந்தது. இதனையடுத்து தனிப்படையினர் கடந்த 2-ந் தேதி ஜார்கண்ட் மாநிலம், தியோகர் சென்று இன்டாஜ் அன்சாரியை கைது செய்து, நேற்று கரூர் நீதிமன்றத்தில் இன்டாஜ் அன்சாரியை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் உண்மையான இணையதளங்களில் பொருட்கள் வாங்குமாறும், சமூகவலைத்தளங்களில் குறைந்த விலையில் பொருட்கள் தருவதாக சொல்லும் இணையவழி குற்றவாளிகளை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சைபர் கிரைம் புகார்களுக்கு 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணையும், www.cybercrime.gov.in என்ற இணையத்தையும் பயன்படுத்த கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட வெளி மாநில குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படையினரை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பாராட்டினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்