கரூரில் கடையில் காசு கொடுத்து வாங்கிய பரிசுகோப்பைகளை, தான் சேவல் போட்டியில் வெற்றி பெற்று கோப்பைகளை வென்றதாக சீன் போட்டுக் கொண்டிருந்த இளைஞர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் வெள்ளியணை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மருதமுத்து. இவர் தனது வீட்டில் 50க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளை வளர்த்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு கோழியாக காணாமல் போய்க்கொண்டிருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கொண்டு இருந்தவர், வீட்டில் வளர்க்கும் கோழிகள் எப்படி காணாமல் போகிறது என கண்டுபிடிக்க நினைத்தவர் தனது வீட்டை சுற்றி சிசிடிவி கேமரா பொருத்தினார்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல கோழி திருடன் சிசிடிவி கேமராவில் வகையாக சிக்கிக் கொண்டான். அந்தக் கோழி திருடன் அதே பகுதியில் வசிக்கும் செல்வம் என்பவரின் மகன் சூர்யா என தெரிந்தது. சூர்யா ஒரு சண்டக்கோழி வளர்த்து வருகிறான். அவன் தனது கோழியை எடுத்துக் கொண்டு தனது நண்பனுடன் இருசக்கர வாகனத்தில் உலா வரும் பொழுது வளர்ப்பு கோழிகள் கண்ணில் தென்பட்டால் உடனே தனது கோழியின் கால்களில் கத்தியை கட்டி வளர்ப்பு கோழியிடம் சண்டையிட செய்வார், கால்களில் கத்திகள் சொருவி உள்ள சண்டைக்கோழி எதிரே உள்ள கோழியை குத்தி கிழித்துக் கொன்று விடும்.
இறந்த கோழியை கையில் எடுத்துக்கொண்டு ஊருக்குள் செல்லும் சூர்யா, தான் கோழிச்சண்டை போட்டியில் பங்கேற்று வென்றதாக கூறி பெருமை பட்டு கொள்வாராம். இது வாடிக்கையாக வைத்துள்ளார். 10 கோழிகளுக்கு மேல் இழந்த மருதமுத்து வெள்ளியனை காவல் நிலையத்தில் சூர்யா மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த மருதமுத்து கரூர் மாவட்ட ஆட்சியரிடமும், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் கொடுத்துள்ளார்.