கரூர் காந்திகிராமம் ஜி.ஆர் நகரில் பட்டப் பகலில் ரவுடிகள் கல்வீச்சு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


 




 


கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி கிராமம் பகுதியில் அமைந்துள்ள ஜி ஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர் மனோகரன், செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துணை மேலாளர், இவர் தனது குடும்பத் தேவைக்காக 2022ம் ஆண்டு,  ரூபாய் 23 லட்சம் வீட்டு அடமான கடன் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். முறையாக வட்டி செலுத்தி வந்த நிலையில் திடீரென அடமான பத்திரம் எனக்கூறி பெறப்பட்ட பத்திரப்பதிவில் மோசடி செய்து வீட்டினை, பைனான்ஸ் அதிபர் ரகுநாதன் கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக கரூர் உரிமையியல் நீதிமன்றத்தில் மனோகரன் வழக்கு தொடர்ந்து,  இரண்டு விசாரணைகள் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் பத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் ரகுநாதன் தூண்டுதலின் பேரில், காந்திகிராமம் பகுதியில் உள்ள, மனோகரன் வீட்டில், பயங்கர ஆயுதங்களுடன் வந்து கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் .


 




 


இது தொடர்பாக காவல்துறை அவசர உதவி எண் 100க்கு உதவி கூரிய, மனோகரன் குடும்பத்தினர் 2 மணி நேரத்துக்கு மேலாக, கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் யாரும் விசாரணைக்கு வரவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். 3 மணிக்கு மேல் , காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் என்பவர் மட்டும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை ஏதும் நடத்தாமல், காவல் நிலையத்தில் வந்து புகார் அளிக்குமாறு கூறி சென்றுள்ளார். இது தொடர்பாக,  பாதிக்கப்பட்ட மனோகரன் கூறுகையில், தனது வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை காண்பித்து ரவுடிகள் பட்டப்பகலில் தங்கள் குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிட்டு பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். இதனை தடுக்க முற்பட்டபோது, திடீரென ரவுடிகள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். அப்பொழுது வீட்டின் முன் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூடியதால் ரவுடிகள் தப்பி ஓடினர்.


 




 


காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக, பைனான்ஸ் அதிபருக்கு துணையாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், அலட்சியம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. தமிழக முதலமைச்சர் பட்டப் பகலில் ரவுடிகள் கரூரில் அட்டகாசம் செய்யும் அளவிற்கு காவல்துறை செயல்பாட்டில் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு விரைந்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கரூர் காந்தி கிராமத்தில், பட்டப் பகலில் 10 ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.