கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் அமைந்துள்ளது மதிகெரே. இந்த பகுதியில் அமைந்துள்ளது எச்.எம்.டி. லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் சையத் மௌலா. 48 வயதான அவருக்கு ஏற்கனவே திருமணமாகிய நிலையில், தற்போது இவர் தன்னுடைய 2வது மனைவியுடன் வசித்து வருகிறார்.
எலக்ட்ரீசியன்:
சையத் மௌலா அந்த பகுதியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். சொந்தமாக கடை வைத்துள்ளார். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்கள், கடந்த 2 மாதமாக வாடகை தரவில்லை என்று கூறப்படுகிறது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சையத் மௌலா தனது கடையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அவரது மனைவி, தங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் முதியவர் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை பார்க்குமாறு கூறியுள்ளார்.
கொதிக்கும் சாம்பார்:
இந்த வேலையை முடித்தால் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை கொண்டு வாடகையாக கொடுக்கலாம் என்று அவரது மனைவி முடிவு செய்திருந்தார். இதனால், தன்னுடைய கணவரிடம் இந்த விவகாரம் பற்றி கூறியுள்ளார். இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சையத் மௌலா, அப்போது சமையல் அறையில் இருந்த கொதிக்கும் சாம்பாரை அவரது மனைவி முகத்தில் ஊற்றினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார்.
இந்த சம்பவத்தின்போது மௌலாவின் மனைவியின் அக்கா, மௌலாவின் சகோதரர் மனைவி, அவரது மகள் ஆகியோர் இருந்துள்ளனர். அவர்களும் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் காயம்பட்ட மௌலாவின் மனைவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, மௌலா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தங்களது முதல் மகளின் திருமணத்திற்காக கடன் வாங்கித்தரவும் சையத மௌலா மறுப்பதாகவும் அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார். அண்டை வீட்டாருக்கு எலக்ட்ரீசியன் பார்த்து தரச் சொன்ன மனைவியின் முகத்தில் கொதிக்கும் சாம்பாரை கணவன் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: ‘ஹோம் ஒர்க் நோட் எங்கே ?’; மாணவனை கம்பால் தாக்கிய ஆசிரியை - கோவில்பட்டி அருகே பரபரப்பு
மேலும் படிக்க: கும்பகோணத்தை நடுநடுங்க வைத்த கொலை: வாலிபரை துண்டு துண்டாக கூறு போட்டு புதைத்த போலி சித்த வைத்தியர்