கர்நாடகாவில் நிகழ்ந்த கூட்டுத் தற்கொலைச் சம்பவத்தில் தற்போது பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகியுள்ளன. தற்கொலை செய்து கொண்டு இறந்த 5 பேரின் சடலங்களுடன் ஐந்து நாட்களாகக் கிடந்த 2 வயதுக் குழந்தை மீட்கப்பட்டு தற்போது பெங்களூருவின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.
பெங்களூரு பைதரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி பாரதி (51) இவர்களுக்கு சிஞ்சனா,சிந்தூரணி என்கிற இரண்டு மகள்களும் மதுசாகர் என்கிற மகனும் உள்ளனர்.நிறைமாத கர்ப்பிணியான சிஞ்சனாவுக்கு ஏற்கனவே 9 மாதக் குழந்தை ஒன்றும் உள்ளது. சிஞ்சனா சிந்தூரணி இருவருமே திருமணமான நிலையில் தற்போது தங்களது தாயுடன் தான் வசித்து வருகின்றனர்.
அண்மையில்தான் நிறைமாத கர்ப்பிணியான சிஞ்சனாவுக்கு வளையல்காப்பு நிகழ்ந்துள்ளது. அதையடுத்துதான் இந்த தற்கொலைகளும் நடந்துள்ளன. தற்கொலை குறித்த கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. ஐந்து நாட்கள் ஆனதால் அவை அழுகிய நிலையில் உள்ளன. அதனால் இறந்த உடல்கள் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்துக் கூறியுள்ள சங்கர், ‘என்னுடைய மகள்கள் இருவரும் அவர்களது வீட்டாருடன் சண்டை போட்டுக்கொண்டு இங்கு வந்துவிட்டார்கள். அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கு பதிலாக எனது மனைவியும் அவர்கள் இருவரையும் இங்கேயே தங்கவைத்துக் கொண்டார்.குழந்தைக்குக் காதுகுத்துவது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக ஒரு பெண் சண்டைபோட்டுக் கொண்டு இங்கு வந்துவிட்டார். அதனால் நாங்கள்தான் அவர்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதற்கிடையேதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது’ என்கிறார்.
மேலும், ‘எனது மகள்கள் இருவருக்கும் எந்தக் குறையும் இல்லாமல் நல்லமுறையில் படிக்க வைத்தேன். மகனையும் பொறியியல் படிக்கவைத்தேன். எங்கள் வீட்டில் பணக்கஷ்டம் என்பது இருந்ததே இல்லை. ஆனால் சம்பவம் நடந்த அன்று வீட்டில் சண்டை போட்டதால் நான் வீட்டிலிருந்து வெளியே கிளம்பிட்டேன். ஆனால் நான் கிளம்பிய அன்றிரவே அனைவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை’ என்கிறார்.
தற்கொலை நடந்த அன்று மதியம் சங்கருக்கும் அவரது மகன் மதுசாகருக்கும் தீவிர வாக்குவாதம் நடந்ததாக அக்கம் பக்கத்தினர் சொல்கிறார்கள். தூக்கில் தொங்கி இறந்துகிடந்த மதுசாகர் இருந்த அறையில் தான் இரண்டு வயதுக் குழந்தையும் தற்போது மீட்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களாக ஒரே அறையில் இருந்ததால் நினைவிழந்து கிடந்த நிலையில் அந்தக் குழந்தை தற்போது மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தற்கொலைதான் என்பது கிட்டத்தட்ட உறுதியானாலும் காரணம் என்னவென்று இதுவரைத் தெரியவரவில்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஒரே நேரத்தில் தற்கொலை செய்துகொண்டது பெங்களூருவில் பெரும் அதிர்ச்சையைத் ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Also Read: 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அச்சு இயந்திரம்