TN GOVT Education Dept: தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அரசாணை:
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ள அரசாணையில், “பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவை கவனமுடன் பரிசீலித்த அரசு அதையேற்று 47013 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும், 5418 பணியிடங்களில் உள்ளவர்கள் ஓய்வுக்குப் பிறகு நாளடைவில் ஒழிவடையும் பணியிடங்களாக அறிவித்து, அவர்கள் ஓய்வு பெறும் வரை தற்காலிக பணியிடங்களாக தொடரலாம் என்றும், அவர்கள் ஓய்வு பெறும் போது சரண் செய்ய அனுமதி வழங்கலாம் என்றும், 145 பணியிடங்களுக்கு இறுதியாக தொடராணை வழங்கப்பட்டு அந்த ஆணை முடிவடையும் நாளுக்கு அடுத்த நாள் முதல் 31.12.2028வரை தொடர் நீட்டிப்பு வழங்கலாம் என்று முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆலோசனைக் குழு:
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக மாற்ற வேண்டு என்பது 10 ஆண்டுகால கோரிக்கையாகும். இந்நிலையில் தான், தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை, தொடர்ந்து நீட்டிப்பதன் அவசியம் குறித்து ஆய்வு செய்ய கடந்த 2022ம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையிலான இந்த குழு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக உள்ள பணியிடங்கள் தொடர்வதன் அவசியம் குறித்தும் ஆராய கடந்த பிப்ரவரி மாதம் கூடியது.
குழுவின் பரிந்துரைகள்
கூட்டத்தின் முடிவில் பள்ளிக்கல்வித்துறையில் தற்போது உள்ள 52 ஆயிரத்து 578 தற்காலிக பணியிடங்களில், பல்வேறு வகையான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 47013 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, தொழிற் கல்வி ஆசிரியர் மற்றும் பல்வேறு ஆசிரியர் அல்லாத 5418 தற்காலிக பணியிடங்களை ஒழிவடையும் பணியிடங்களாக தற்காலிகமாக தொடரலாம் என்றும், இந்த பணியிடங்களில் இருப்பவர்கள் ஓய்வு பெறும் போது அந்த பணியிடங்கள் சரண் செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியர் அல்லாத 145 பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாக தொடர்வதுடன் அவர்களுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கலாம் என்றும், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (ஆண் மற்றும் பெண்) பணியிடங்களை புத்தாக்கம் செய்யலாம் என்றும், முடிவு எடுக்கப்பட்டு பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் தற்காலிக பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த அரசாணை வழங்க வேண்டி பள்ளிக்கல்வி இயக்குநர் அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை பரிசீலித்த தமிழக அரசு 47 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியிட்டுள்ளது.